இந்தியாவிலிருந்து இலங்கை வரை சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அங்கு உணவு எரிபொருள் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இலங்கை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு எரிபொருள் வாங்குவதற்கு பல மணி நேரங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்து நிற்கின்றனர். மேலும் கடும் உணவு நெருக்கடி வரும் என்று அந்த நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க தொடர்ந்து இந்தியாவிடம் இருந்து நிதியுதவி மற்றும் எரிபொருள் உதவிகளை வாங்கி வருகிறது இலங்கை.
இந்நிலையில் எரிபொருள் உணவுகள் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்ல கடல் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “முதல் கட்டமாக இலங்கையின் வடபகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்துக்கும், இந்தியாவின் புதுச்சேரிக்கும் இடையே இந்த சரக்கு கப்பல் இயக்கப்படும். மேலும் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்துக்கும், தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி ஆகிய நகரங்களுக்கும் விமான போக்குவரத்து தொடங்குகிறது. இலங்கை தற்போது சந்தித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணங்களை கொண்டு வர இந்த போக்குவரத்து திட்டங்கள் பெரும் உதவியாக இருக்கும்.”என்று தெரிவித்தார்.
.