�
இந்தியாவில் 92 நாட்களில் 12.2 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி, தடுப்பூசி வேகமாக செலுத்தப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து இன்று(ஏப்ரல் 18) மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 92 நாட்களில் 12.2 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசியை வேகமாக செலுத்திவரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த இலக்கை அமெரிக்கா 97 நாட்களில் அடைந்து இரண்டாவது இடத்திலும், சீனா 108 நாட்களில் அடைந்து மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2.6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி அதிக பாதிப்புகளையும், இறப்புகளையும் சந்திக்கும் மாநிலங்களும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னிலையில் உள்ளன. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 36 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலே கூறிய நான்கு மாநிலங்களுடன், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகியவற்றில் மொத்தமாக 59.5 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் வேளையிலும், தடுப்பூசிகள் செலுத்தப்படும் வேகம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதே வேகத்தில் சென்றால் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் 80 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
.�,