pஇந்தியா முன்னேறுகிறது: நிர்மலா சீதாராமன்

Published On:

| By Balaji

ஜிஎஸ்டியை எளிமையாக்கியதன் மூலம் எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63ஆவது இடத்தை பிடித்துள்ளது என்றும் ஜிஎஸ்டி மேலும் எளிமையாக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

உலக வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து எளிதாக வர்த்தகம் செய்வது உட்பட பல்வேறு பிரிவுகளில் உலக நாடுகளை வரிசைப்படுத்தி உலக வங்கி பட்டியல் வெளியிடுகிறது. இதில் எளிதாக வர்த்தகம் செய்யும் பிரிவில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் சிங்கப்பூர், ஹாங்காங், டென்மார்க், கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

இதுகுறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) எளிமையாக்கியதன் மூலம் எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது. திவால் குறியீடு அமல்படுத்தப்படுவதும் எளிதான வர்த்தகம் பட்டியலில் இந்தியாவை முன்னேற்ற உதவியது. ஜிஎஸ்டி மேலும் எளிமையாக்கப்படும். ஆன்லைன் கணக்கு தாக்கலில் உள்ள குறைபாடுகளைக் களைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தப் பட்டியல் தற்போது மும்பை, டெல்லியை மட்டும் கணக்கில் கொண்டு எடுக்கப்படுகிறது. இதில் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவைச் சேர்க்க வேண்டும் என்று கூறியதை உலக வங்கி ஏற்றுக்கொண்டது. இப்போதைக்கு எங்களது நோக்கம் இந்த பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா இடம்பெற வேண்டும் என்பதே.

முன்னேறிவரும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. இது மிகப்பெரிய முன்னேற்றம். வர்த்தகம் தொடங்குவதில் நாம் ஓர் இடம் மட்டுமே முன்னேறி உள்ளோம்.

எளிதான வர்த்தகம் பட்டியலில் இந்தியா முன்னேற மாநில அரசுகளும் வர்த்தக சூழ்நிலையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். குறிப்பாக நிலம், வீடு போன்ற சொத்துகள் பத்திரப்பதிவை அதிகரிக்க வேண்டும். திவால் பிரச்சினைக்குத் தீர்வு, கட்டுமான அனுமதி, எல்லை தாண்டிய வர்த்தகம் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 20 அன்று கோவாவில் நடைபெற்ற 37ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய வரிக்குறைப்பு முடிவுகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அந்தக் கூட்டத்தில் முதலீடு மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share