உலகளவில் 2019ஆம் ஆண்டில் 93.1 கோடி டன் உணவு அல்லது நுகர்வோருக்குக் கிடைக்கும் மொத்த உணவில் 17 சதவிகிதம் வீடுகள், சில்லறை விற்பனையாளர்கள், உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் வீணாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட உணவு கழிவு அட்டவணை அறிக்கை (UNEP – United Nations Environment Programme 2021) மூலம் தெரியவந்துள்ளது. இதில் இந்தியாவில் ஒவ்வொரு தனி நபரும் ஆண்டுதோறும் 50 கிலோ எடையுடைய உணவை வீணாக்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வீணாக்கப்பட்ட உணவின் எடை, 2019-20ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் தோட்டக்கலை பொருட்களின் உற்பத்திக்கு சமம் ஆகும். வீடுகளில்தான் இந்த உணவு வீணாவது அதிக அளவில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 300 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். ஆண்டுதோறும் பல நூறு பேர் பட்டினியால் சாகும்போது கடந்த ஆண்டில் 93.1 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் 69 கோடி மக்கள் பசியுடன் இருப்பதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
உலகளாவிய தனிநபர் மட்டத்தில், ஒவ்வோர் ஆண்டும் 121 கிலோ உணவு வீணடிக்கப்படுகிறது, இதில் 74 கிலோ வீடுகளில் நடக்கிறது. தெற்காசியாவில், ஆப்கானிஸ்தானில் 82 கிலோ, நேபாளத்தில் 79 கிலோ, இலங்கையில் 76 கிலோ, பாகிஸ்தானில் 74 கிலோ மற்றும் வங்காளதேசத்தில் 65 கிலோ ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு நபருக்கு 50 கிலோ உணவு வீணாகிறது என்று வீட்டு மட்டத்தில் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
தெற்காசிய மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது, மேற்கு ஆசிய மற்றும் துணை – சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் தனிநபர் உணவு வீணானது மிக அதிகமாக உள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் உணவு வீணாவதைக் குறைக்க வேண்டும் என்றும் ஐநா சபையின் உணவு பாதுகாப்பு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட நிர்வாக இயக்குநர் இங்கர் ஆண்டர்சன், “உணவுக் கழிவுகளைக் குறைப்பது கார்பன் உமிழ்வைக் குறைக்கும், நில மாற்றம் மற்றும் மாசுபாட்டின் மூலம் இயற்கையின் அழிவை மெதுவாக்கும், உணவு கிடைப்பதை மேம்படுத்துகிறது, இதனால் பசி குறைகிறது மற்றும் உலகளாவிய மந்தநிலையின்போது பணத்தை மிச்சப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
**- ராஜ்**
�,