�உத்தரப் பிரதேசம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றிய போலி மருத்துவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான எம்பிபிஎஸ் மருத்துவச் சான்றிதழ் வைத்துள்ள ஓம் பால் சர்மா என்ற அந்த நபர் இதுவரை ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரூவைச் சேர்ந்த ஆர்.ராஜேஷ் என்பவருடன், ஓம் பால் 2000ஆம் ஆண்டில், மங்களூரில் உள்ள இந்திய விமானப் படை மருத்துவமனையில், மருத்துவ சார் பணியாளராகப் பணியாற்றியிருக்கிறார். ராஜேஷ் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், அவருடைய எம்பிபிஎஸ் பட்டத்தில் தனது புகைப்படத்தை மாற்றி மருத்துவராக ஏமாற்றி வந்தது தெரியவந்திருக்கிறது.
இந்தப் பட்டத்தின் அடிப்படையில் ஓம் பால் சர்மாவுக்கு சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இந்தப் பட்டத்தை வைத்துக்கொண்டே அறுவை சிகிச்சை செய்வது தொடர்பான பல்வேறு சான்றிதழ்களையும் அவர் பெற்றுள்ளார். ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளையும் இவர் மேற்கொண்டிருக்கிறார்.
இந்த மோசடியைத் தெரிந்துகொண்ட ஒரு கும்பல் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறது. இதுகுறித்து ஓம் பால் தனக்கு மிரட்டல் வருவதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது போலி மருத்துவரின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து சஹரன்பூர் மாவட்ட போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்துள்ளனர்.�,