இந்திய, சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் பதட்டமான கால்வான் நதி பள்ளத்தாக்கில் இந்தியாவும் சீனாவும் குறைந்தது 1 கிலோமீட்டர் தூரத்திற்கு தங்கள் துருப்புக்களை பின்னோக்கி நகர்த்தியுள்ளன என்று என்.டி.டிவி.நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூன் 15 அன்று சீன வீரர்களுடன் ஏற்பட்ட பயங்கர சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதையடுத்து இரு நாட்டு உறவுகளிடையே பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 3 ஆம் தேதி, லடாக் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய மோடி, “எல்லை விரிவாக்கம் செய்வது என்ற தத்துவத்துக்கு வயதாகிவிட்டது. எல்லை விரிவாக்கம் செய்ய முயன்ற நாடுகள் வரலாற்றில் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளன. இது வளர்ச்சியை விரிவாக்கம் செய்ய வேண்டிய காலம்” என்று சீனாவை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
இந்த நிலையில் பிரதமரின் லடாக் பயணத்துக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு கால்வான் நதிப் பள்ளத்தாக்கு எல்லையில், இந்தியா- சீனா ஆகிய இரு தரப்பு படையினருக்கும் இடையே ஒரு இடையக மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளதாக என்.டி.டிவி. செய்தி வெளியிட்டுள்ளது. நதி-வளைவு கரையில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் சீன வீரர்கள் கட்டிய தற்காலிக கட்டமைப்புகள் இரு தரப்பினராலும் அகற்றப்பட்டு வருவதாகவும் எல்லையோர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம், இந்திய மற்றும் சீனப் படைகளின் தளபதிகள் கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு சந்தித்தனர். லெப்டினன்ட்-ஜெனரல் அளவிலான இந்தப் பேச்சுகள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உண்மையான எல்லையான கோட்டில் பதற்றத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளன.
**-வேந்தன்**�,