சிறப்புக் கட்டுரை: இந்திய – சீன எல்லை: புவியியலும் அரசியலும்!

Published On:

| By Balaji

மு.இராமனாதன்

செப்டம்பர் 15 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இந்திய ராணுவம் சீன எல்லையில் கடும் சோதனைகளை எதிர்கொண்டு வருகிறது’ என்றார். கொரோனாவாலும் பொருளாதாரப் பின்னடைவாலும் இந்தியா ஏற்கனவே சோதனைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில்தான், சீனாவின் ஆக்கிரமிப்புக் கரங்கள் எல்லை தாண்டி நீள்கின்றன. இரு தரப்பும் துருப்புகளைக் குவிக்கின்றன. உறைய வைக்கும் குளிர்காலம் வாசலில் காத்திருக்கிறது என்றாலும் படைகள் உடனடியாகப் பாசறைகளுக்குத் திரும்பப் போவதில்லை என்று தெரிகிறது. எல்லையில் இயல்புநிலை திரும்ப ஏன் தாமதமாகிறது? இதற்கான விடை வரலாற்றில் இருக்கிறது, புவியியலில் இருக்கிறது, சீனாவின் மாறிவரும் அரசியல் அணுகுமுறையில் இருக்கிறது.

**அரங்குகள் மூன்று**

3488 கிமீ நீளமுள்ள இந்திய – சீன எல்லைப் பகுதி பிரதானமாக மேற்கு அரங்கு, கிழக்கு அரங்கு, நடு அரங்கு என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் இமாச்சலப் பிரதேசத்தையும் உத்தரகாண்டத்தையும் ஒட்டிய நடு அரங்கில் பெரிய கருத்து வேற்றுமைகள் இல்லை.

கிழக்கு அரங்கில் அருணாசலப் பிரதேசம் இருக்கிறது. இங்குள்ள தவாங் பகுதிக்குச் சீனா உரிமை கோருகிறது. 1952 முதல் இந்தியாவின் எல்லா நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவாங் வாக்காளர்கள் பங்கெடுத்து வருகிறார்கள். சீனாவின் கோரிக்கையை இந்தியா மறுத்து வருகிறது. இப்போதையப் பிரச்சினை கிழக்கில் இல்லை.

மேற்கு அரங்கில்தான் ஓராண்டுக்கு முன்பு ஒன்றியப் பிரதேசமாக மாற்றப்பட்ட லடாக் இருக்கிறது. லடாக்கை அடுத்துள்ளது அக்சை-சின் பகுதி. இந்தியா அக்சை-சின்னை லடாக்கின் பகுதியாகப் பார்க்கிறது. சீனாவோ தனது சின்ஜியாங் மாநிலத்தின் பகுதியாகப் பார்க்கிறது. அக்சை-சின் ஒருபுறம் சின்ஜியாங்கை ஒட்டியும் மறுபுறம் திபெத்தையும் ஒட்டியும் இருப்பதால் சீனாவுக்கு இது பூகோள ரீதியாக முக்கியமானது. அக்சை-சின் இப்போது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தப் பகுதிக்கு இந்தியா உரிமை கோருகிறது.

1959இல் சீனப் பிரதமர் சூ-யென்-லாய் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். நேருவும் சூ-வும் எல்லைப் பிரச்சினை குறித்து, முக்கியமாக அக்சை-சின், அருணாசலப் பிரதேசப் பகுதிகள் குறித்துப் பேசினார்கள். 1920க்கு முன்பு எந்த வரைபடத்திலும் அக்சை-சின் சீனாவின் பகுதியாகக் காட்டப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார் நேரு. 1914இல் ஆங்கிலேயரால் வரையப்பட்ட மக்-மோகன் கோடுதான் அருணாசலப் பிரதேசத்தை இந்தியப் பகுதியாகக் காட்டுகிறது. அதற்கு முன்புவரை அது திபெத்தின் பகுதிதான் என்றார் சூ. மக்-மோகன் கோட்டைச் சீனா ஏற்காது என்றும் அவர் சொன்னார். வாதங்கள் நீண்டன. முடிவில் சூ ஒரு சமரசத்தை முன்மொழிந்தார். மேற்கேயுள்ள அக்சை-சின் சீனாவுக்கு முக்கியமானது. அதை இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டும்; பதிலுக்கு கிழக்கேயுள்ள தவாங் உள்ளிட்ட அருணாசலப் பிரதேசத்தை சீனா விட்டுக்கொடுக்கும். நேரு இந்தச் சமரசத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. 19ஆம் நூற்றாண்டு வரைபடங்களில்கூட அக்சை-சின் பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதியாகத்தான் காட்டப்படுகிறது. 1914 முதல் 1948 வரை மக்-மோகன் கோட்டைச் சீன அரசுகள் எதிர்க்கவில்லை. ஆகவே, இரண்டு பகுதிகளும் இந்தியாவையே சேர வேண்டுமென்று வாதிட்டார் நேரு. நேருவுக்குப் பின் வந்த எந்த இந்தியப் பிரதமரும் இந்தச் சமரசத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனில், 1993இல் மேற்கொள்ளப்பட்ட எல்லைப் பாதுகாப்பு உடன்படிக்கை ஒரு தற்காலிகத் தீர்வை ஏற்றுக்கொண்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையே தீர்மானமான எல்லைக் கோடுகள் இல்லை. ஆகவே 1959 முதல் சீனா சொல்லி வரும் ‘நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடு’ (Line of Actual Control- LAC) என்பதை ஒரு தற்காலிக ஏற்பாடாக இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இது இப்போதைக்கு அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பிரிக்கும் கோடு. ஆனால், பல இடங்களில் இந்த நடப்புக் கோட்டிலும் தர்க்கம் நிலவுகிறது. இப்போதையப் பிரச்சினை, மேற்கு அரங்கில் முக்கியமாக மூன்று இடங்களில் கூர்மை அடைந்திருக்கிறது. அவை… கால்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, தெப்சாங் சமவெளி.

**கால்வான் பள்ளத்தாக்கு**

ஜூன் 15 இரவில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட கால்வான் பள்ளத்தாக்கு, இமயமலைக்கும் கால்வான் ஆற்றுக்கும் இடையில் இருக்கிறது. கால்வான் ஆற்றின் பெரும்பகுதி சீனாவில் ஓடி, இந்தியப் பகுதியில் உள்ள ஷயாக் ஆற்றில் சங்கமிக்கிறது. 1962 போருக்குப் பிறகு இந்தப் பள்ளத்தாக்கைக் குறித்த உரிமைப் பிரச்சினைகளைச் சீனா எழுப்பியதில்லை. எனில், இப்போது ஷயாக் நதிச் சங்கமம் வரை உரிமை கொண்டாடுகிறது. அதாவது நடப்புக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தனக்குச் சாதகமாக இன்னும் தள்ளி வைக்க முயற்சி செய்கிறது.

**பாங்காங் ஏரி**

அடுத்து பாங்காங் ஏரி. கடல் மட்டத்தைவிட 14,000 அடி உயரத்தில் இருக்கிறது. 135 கிமீ நீளம். பூமராங் வடிவம். மையத்தில் 6 கிமீ அகலம். குளிர்காலத்தில் நீர் உறைந்து போகும். அதன்மீது வாகனங்கள் போக முடியும். அப்போது வெப்பநிலை, அல்ல குளிர்நிலை, மைனஸ் 40 பாகையாக இருக்கும். ஏரியில் மூன்றில் இரண்டு பங்கு சீனப் பகுதியில் இருக்கிறது. ஆனால், நடப்புக் கட்டுப்பாடுக் கோட்டை நீரின் மேல் எங்கே எழுத வேண்டும் என்பதில் தர்க்கம் நிலவுகிறது. ஏரியின் வடக்குக் கரையில் மலைக் குருத்துகள் நீர்ப்பரப்புக்குள் விரல்களைப் போல் நீள்கின்றன. இப்படியான எட்டு குருத்துகள் உள்ளன. அவை விரல்-1, விரல்-2… …விரல்-8 என்று அழைக்கப்படுகின்றன. விரல்-1 முதல் விரல்-4 வரை இந்தியப் பகுதி. விரல்-8இல் சீனாவின் எல்லைச்சாவடி இருக்கிறது. எனில், விரல்-4 முதல் விரல்-8 வரையிலான பகுதிக்கு இரண்டு நாடுகளும் உரிமை கோருகின்றன. மே மாதத்துக்கு முன்புவரை இந்தப் பகுதியில் இரு நாட்டுத் துருப்புகளும் ரோந்து போய்க்கொண்டிருந்தன. இப்போது இந்தியத் துருப்புகளைச் சீனா தடுத்து வருகிறது.

ஏரியின் வடக்குக் கரையிலிருந்த கவனம், ஆகஸ்ட் 29, 30 தேதிகளில் தெற்குக் கரைக்குத் திரும்பியது. இங்கே சீனத் துருப்புகள் எல்லை தாண்டின என்றும் இந்தியத் துருப்புகள் அவற்றைக் கட்டுப்படுத்தின என்றும் செய்திகள் வெளியாயின. இரு தரப்பும் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை. தொடர்ந்து இதே பகுதியில் செப்டம்பர் 7 அன்று தோட்டாக்கள் வெடித்தன. 45 ஆண்டுகளாகத் துப்பாக்கிகள் மௌனித்து வைக்கப்பட்டிருந்த பகுதி இது. இந்திய ராணுவம் இப்போது தெற்குக் கரைச் சிகரங்களில் துருப்புகளைக் குவித்து வைத்திருக்கிறது. இது ஒரு நல்ல போர்த்தந்திரம் என்று ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.

**தெப்சாங் சமவெளி**

மூன்றாவதாக, முரண்பாடு கூர்மையடைந்திருக்கும் இடம் தெப்சாங் சமவெளி. பனிமலைப் பகுதியில், 18,000 அடி உயரத்தில் ஒரு பெரும் மணல்வெளி. ராணுவ ரீதியாக முக்கியமானது. டாங்கிகளும் தளவாடங்களும் போகக்கூடிய, போரிடக்கூடிய பகுதி. இந்தச் சமவெளியை அடைவதற்கு Y வடிவிலான ஒரு குறுகலான வழி இருக்கிறது. இது நடப்புக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து 18 கிமீ தொலைவில் இருக்கிறது. சீன ராணுவம் இந்த வழியை இப்போது அடைத்துவிட்டது. இதனால் இந்தியத் துருப்புகளால் PP10, 11, 11a, 12, 13 என்று பெயரிடப்பட்ட ஐந்து ரோந்துச் சாவடிகளுக்குச் செல்ல முடியவில்லை. இதன் மூலம் இந்தியப் படைக்கு 972 சதுர கிமீ பரப்பிற்கான வழி மறிக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள். இதே பகுதியில் இதே விதமாக சீனா 2013ஆம் ஆண்டும் எல்லை தாண்டியது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு பின் வலித்துக்கொண்டது.

**சீனாவின் அரசியல்**

இந்தப் பதற்றம் போராக மாறுமா? போர் அழிவைத்தான் கொண்டு வரும். போர் எந்தக் கருத்து வேற்றுமையையும் களைந்ததாக வரலாறு இல்லை. மாறாக வேற்றுமைகள் அதிகமாகும். ஆகவே, இரண்டு நாடுகளும் ஒரு முழு யுத்தத்தில் இறங்கிவிடாது என்றுதான் நோக்கர்கள் கருதுகின்றனர். அதே வேளையில் இந்தப் பதற்றம் உடனடியாக முடிவுக்கு வராது என்றும் அவர்கள் கருதுகின்றனர். இந்தியா இந்தச் சூழலை எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால், சீனா நீண்ட காலமாகத் திட்டமிட்டுக் காய்களை நகர்த்துகிறது என்பதே அரசியல் விஞ்ஞானிகளின் கணிப்பாக இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா தனது பகுதியில் சாலைகள் அமைக்க முற்பட்டதுதான் இப்போதையப் பதற்றத்தின் தொடக்கப்புள்ளியாகக் கருதப்படுகிறது. சில நோக்கர்கள் கடந்த ஆண்டு இந்தியா, லடாக்கை ஒன்றியப் பிரதேசமாக மாற்றியபோதே சீனா தனது அதிருப்தியை வெளியிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். சீனாவின் ஆக்ரோஷமான முகம் ஒன்று வெளித்தெரிகிறது. இதற்குச் சீனாவின் மாறிவரும் அணுகுமுறைதான் முக்கியக் காரணி.

எண்பதுகளில் சீனா தனது இரும்புக் கதவுகளைத் திறந்தது. அந்நிய மூலதனத்துக்குக் கம்பளம் விரித்தது. நாடு தொழில்மயமானது. நாட்டு மக்கள் தொழிலாளர்களாயினர். அவர்கள் உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்தனர். டெங் சியோபிங், ஜியாங் ஜெமின், ஹூ ஜின்டாவ் ஆகிய தலைவர்கள் அயல்நாடுகளுடன் நேசம் பாராட்டினர். தேசம் வறுமையை விரட்டியது. பெரும் பொருளாதாரமாக வளர்ந்தது. இப்போதைய தலைவர் ஷி ஜிங் பிங்-கின் அணுகுமுறை மாறிவிட்டது. அவர் சீனாவை ஓர் ஆதிக்கச் சக்தியாக நிறுவ முயற்சி செய்கிறார். அமெரிக்காவுடனும், ஆஸ்திரேலியாவுடனும், தென் சீனக் கடல் நாடுகளுடனும், இந்தியாவுடனும் கடும்போக்கைக் கடைப்பிடிக்கிறார்.

சீனா நடப்புக் கட்டுப்பாட்டுக் கோட்டைச் சில இடங்களில் தாண்டிவிட்டதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டி வந்தது. ஆனால், இதுகுறித்து ஒரு புகைபடிந்த சித்திரம்தான் பொதுவெளியில் இருக்கிறது. செப்டம்பர் 15 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனா 1993 சமாதான உடன்படிக்கையை மீறித் துருப்புகளைக் குவித்து வருகிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறார். இந்திய சமாதானத்தை விரும்புகிறது; எனில் இறையாண்மையைக் காப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் எச்சரித்திருக்கிறார். சீனாப் படைகள் நடப்பு எல்லைக் கோட்டைத் தாண்டிய இடங்களைக் குறித்து இப்போதைக்கு அடக்கியே வாசித்திருக்கிறார்.

எல்லையில் இழுபறி தொடங்கியது முதற்கொண்டு பல மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன. செப்டம்பர் 4 அன்று மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்தித்துக்கொண்டனர். அதே மாநாட்டில் செப்டம்பர் 10 அன்று வெளியுறவு அமைச்சர்கள் உரையாடினர். முதன்முறையாக ஒரு சமாதானக் கூட்டறிக்கையும் வெளியிட்டனர். செப்டம்பர் 22 அன்று தளபதிகள் சந்தித்தனர். அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இப்போதைக்கு மேலதிகமாகப் படைகளைக் குவிப்பதில்லை என்று முடிவு செய்தார்கள். அதுவும் பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. செப்டம்பர் 28 அன்று சீனா, 1959இல் சூ-யென்-லாய் முன்வைத்த எல்லைக் கோட்டின் அடிப்படையில் மீண்டும் பேசலாம் என்றது. செப்டம்பர் 30 அன்று நடந்த ராஜதந்திரிகள் மட்டத்திலான கூட்டத்தில் இந்தியா இதை ஏற்க மறுத்துவிட்டது. அடுத்து அக்டோபர் 12 அன்று தளபதிகள் மட்டத்தில் உரையாடல் நடக்கவிருக்கிறது,

உரையாடல்கள் நீண்டுகொண்டே போகின்றன. குளிர்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு பக்கத்திலிருந்தும் உணவும் உடையும் நீரும் ஆயுதமும் எரிபொருளும் இமயத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கப்படுகின்றன. படைகள் இப்போதைக்கு பின்னேறப் போவதில்லை. இயல்புநிலை திரும்ப அதிக காலம் வேண்டி வரக்கூடும்.

**இந்தியா என்ன செய்யலாம்?**

இந்தச் சூழலில் இந்தியா என்ன செய்யலாம்? அரசு, எல்லையில் உள்ள நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தலாம். இதற்கு முன்பு இந்தியா சந்தித்த போர்களின் முடிவுகள் பலவிதமாக அமைந்திருக்கின்றன. 1962 சீனப் போரின் முடிவு இந்தியாவுக்குச் சிலாக்கியமாக இல்லை. 1965 பாகிஸ்தான் யுத்தம் வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொள்ளப்பட்டது. வங்காள தேசப் போரிலும் (1971), கார்கில் யுத்தத்திலும் (1999) இந்தியா வெற்றிக்கொடி நாட்டியது. முடிவுகள் எப்படியானாலும் எல்லாப் போர்க் காலங்களிலும் இந்திய மக்கள் ஒற்றைக் கட்டாக நின்றார்கள். இப்போதும் அப்படியான நிலையைக் கொண்டுவர வேண்டும்.

அடுத்ததாக, சில அரசியல் நோக்கர்கள் இந்தியா மேற்கு நாடுகளின் உதவியைப் பெற வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். அமெரிக்கா தேர்தலில் மும்முரமாக இருக்கிறது. மற்ற நாடுகள் கொரோனாவை நேரிடுவதிலும் தத்தமது பொருளாதாரத்தைச் சீரமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றன. ஆகவே, அந்நிய நாடுகள் உதவும் என்று இந்தக் காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. மேலும் இந்தியாவும் கொரோனாவையும், பொருளாதாரச் சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. யுத்தம் தீர்வாகாது. ராஜ்ய வழிகளில் தீர்வுகளை மேற்கொள்வதே உசிதமானது. அதே வேளையில் அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பணியாது என்பதையும் தெரிவிக்க வேண்டும். சர்வதேச நல்லெண்ணத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.

மேலும், சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. கடந்த தசாப்தங்களில் இந்தியா மட்டுமில்லை; உலக நாடுகள் பலவும் சீனாவின் உற்பத்தியையும் அதன் விநியோகச் சங்கிலியையும் அதிகமாகச் சார்ந்திருக்கின்றன. இதை ஒரு நாளில் மாற்றிவிட முடியாது. ஆனால், அதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்க வேண்டும். இந்தியா மனித வளம் மிக்க நாடு. அந்த வளத்தில் கணிசமாக இளரத்தம் ஓடுகிறது. இந்த மக்கள் திரளுக்கு தரமான கல்வியையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதன் மூலம் இந்தியாவால் ஒரு பெரிய உற்பத்திச் சக்தியாக வளர முடியும். அதற்கான தீர்மானமான அடிவைப்புகளை மேற்கொள்வதன் மூலம் இந்தச் செய்தியை உலக நாடுகளிடையே பரப்ப முடியும்.

பிரச்சினை சிக்கலானதுதான். இந்தியாவால் இதை நேரிட முடியும். மீண்டு வரமுடியும். முன்னோக்கிச் செல்லவும் முடியும்.

**கட்டுரையாளர் குறிப்பு**

: மு இராமனாதன் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share