சென்னையில் பிரபல வணிக கடை நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோரில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
வணிக நிறுவனங்களில் பிரபலமான சரவணா ஸ்டோர் மூன்று நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது. சரவணா செல்வரத்தினம், சூப்பர் சரவணா ஸ்டோர், லெஜெண்ட் சரவணா ஸ்டோர் என்ற மூன்று கடைகள் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் சென்னையில் மட்டும் தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர், பாடி, சோழிங்கநல்லூர் மற்றும் உஸ்மான் சாலை ஆகிய ஏழு கிளைகளை நடத்தி வருகிறது. மேலும் மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவையிலும் சரவணா ஸ்டோர் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டை தாண்டி பெங்களூரிலும் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நகைக்கடை, துணிக்கடை, பர்னிச்சர் மற்றும் பாத்திரைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் என அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் தி.நகர், போரூர், புரசைவாக்கம், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளில் இன்று(டிசம்பர் 1) காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விற்பனையை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்தது மற்றும் கணக்கில் வராத முதலீடு குற்றச்சாட்டு காரணமாக சரவணா ஸ்டோர் கடைகள், அலுவலகங்கள், குடோன்கள், உரிமையாளர் வீடுகள் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 7.30 மணியிலிருந்து சோதனை நடைபெற்று வருவதால் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் கடை இன்று விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் முடிவில்தான் எத்தனை கோடிக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது என்பது தெரியவரும்.
கடந்த 2018ஆம் ஆண்டு சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமான வரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் குரோம்பேட்டை சரவணா ஸ்டோரில் வாங்காத பொருளுக்கு பில்போடுவதும், வெளியில் வந்து பொருள்களை சரிபார்த்து விட்டு திருப்பி கேட்டால் பில் டிக் பண்ணியாச்சி பொருள் தரமுடியாது என்று கூறுவதாகவும் சமூகவலைதளங்களில் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,