nஜேப்பியார் கல்வி குழுமத்தில் ஐடி ரெய்டு!

Published On:

| By Balaji

ஜேப்பியார் கல்வி குழுமத்துக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை இன்று (நவம்பர் 7) அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தின் போது தமிழகச் சட்டமன்ற மேலவைக் கொறடாவாகவும், 1972 முதல் 1987 வரை அதிமுகவின், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளராகவும் இருந்தவர் ஜேப்பியார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு கல்வி நிறுவனங்களைத் தொடங்கிச் செயல்படுத்தி வந்தார். 2016ல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,

இந்நிலையில் இன்று (நவம்பர் 7), ஜேப்பியார் குழுமத்துக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 150 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சத்யபாமா கல்லூரி, செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.ஆர் கல்லூரி, பனிமலர் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

”இந்த கல்வி நிறுவனங்களில், பல பரிவர்த்தனைகள் ரொக்கமாக நடந்துள்ளன, பெறப்பட்ட பணத்திற்குச் சரியான கணக்குகள் இல்லை. வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக” வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூளைமேடு ரயில்வே காலனியில் உள்ள பனிமலர் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாணவர்களிடம் பெறப்பட்ட கல்விக் கட்டண விவரங்கள் உட்படப் பல ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் என்பதால் இந்த சோதனை மேலும் ஓரிரு நாட்கள் தொடரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எவ்வளவு பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்கள் தற்போது தெரியவரவில்லை.

ஜேப்பியார் கல்வி குழுமத்தின் நிகர சொத்து மதிப்பு 2016ல் ரூ.3000 கோடியாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆண்டு அவர் மரணமடைந்ததை அடுத்து ஜேப்பியார் கல்வி குழுமத்தை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share