15ஆம் தேதிக்குள் சொத்து வரியைச் செலுத்தினால் ஊக்கத்தொகை!

Published On:

| By admin

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பான பிரச்சினைகளும் போராட்டங்களும் அதிகரித்துவரும் நிலையில், சொத்து வரியை 15ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவிகிதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தவறுபவர்களுக்கு 2 சதவிகிதம் அபராத தொகையுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை, மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் வாயிலாகவும், மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், உரிமம் ஆய்வாளர்கள் வாயிலாகவும் எளிதாக செலுத்தலாம்.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்ய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட சொத்து வரி சீராய்வு குழு பரிந்துரை செய்துள்ளது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையில், சீராய்வு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய சொத்து வரி வீதம் மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும்.
எனவே, 2022-23ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்தி வந்த கட்டண விகிதத்திலேயே வருகிற 15ஆம் தேதிக்குள் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
15ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5 சதவிகிதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். தவறும் நபர்களுக்கு 2 சதவிகிதம் அபராத தொகையுடன் சொத்து வரி வசூலிக்கப்படும்.
மறு சீராய்வுக்குப் பிறகான சொத்து வரி கட்டணம் மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முறையாக அறிவிக்கப்படும். அதன் பின்னர், சொத்து உரிமையாளர்கள் தங்களின் 2022-23ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான மீதமுள்ள சொத்து வரியைச் செலுத்தலாம்.
சென்னை மாநகராட்சிக்கு இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலமாக சொத்து வரி செலுத்தும்போது, ஏதேனும் குறைபாடுகள் அல்லது சிக்கல்கள் ஏற்படின், சென்னை மாநகராட்சியின் ‘1913’ என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யவும், அதன் அடிப்படையில் தீர்வு செய்யவும் தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் இருந்த அறிவிப்பால் வரி நிலுவை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

**-ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share