பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
அண்மையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி வீதிகளில் சுற்றித்திரியும் நபர்களைச் சுட்டுக்கொல்ல போலீஸாருக்கும், ராணுவத்துக்கும் அனுமதி வழங்கி நாட்டு மக்களை கதி கலங்க வைத்த பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ துதர்தே, அதன் தொடர்ச்சியாக தற்போது நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் இதுவரை 13 லட்சத்து 67,894 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 23,809 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவும் அபாய சூழல் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. ஆனால் 11 கோடி மக்கள்தொகை கொண்ட பிலிப்பைன்ஸில் இதுவரை 21 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை என்கிற அறிவிப்பை அதிபர் ரோட்ரிகோ துதர்தே வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர், “என்னை தவறாக எண்ணாதீர்கள். நாட்டில் ஒரு நெருக்கடி நிலவுகிறது. தேசிய அவசர நிலை உள்ளது. எனவே தடுப்பூசியா அல்லது சிறையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால் நான் உங்களை கைது செய்வேன். பின்னர் நானே உங்களுக்கு ஊசி போடுவேன்.
நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால் பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறுங்கள். இந்தியா அல்லது அமெரிக்கா எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் பிலிப்பைன்ஸில் இருந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
**-ராஜ்**
.�,