பண்டிகைகளை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.. அதேவேளையில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு முறைகளை தவறாமல் கடைபிடியுங்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
அக்டோபர் மாத இறுதிக்குள் தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடையும் வகையில், தினசரி தடுப்பூசி பணியுடன், வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் லட்சக்கணக்கில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை ஆறு மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாகவே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மது மற்றும் அசைவ பிரியர்களுக்காக கடந்தவாரம் சனிக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று(அக்டோபர் 26) சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசிக் கிடங்கில் கொரோனா மற்றும் குழந்தைகளுக்கான அட்டவணை தடுப்பூசிகளின் இருப்பு குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, நிமோனியா, மூளைக்காய்ச்சல், கொரோனா போன்ற 12 வகையான நோய்களைத் தடுக்க 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குச் சிறப்பாகச் செலுத்தப்பட்டு வருகின்றன. எல்லா வகையான தடுப்பூசிகளும் கையிருப்பில் உள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை ஆறு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் நடைபெறும் சில இடங்களில் முதல்வரே நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி செலுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் இதுபோன்ற சீரிய நடவடிக்கைகளால் இதுவரை 5 கோடி 68 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏழாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் அக்டோபர் 30 சனிக்கிழமையன்று நடைபெறும். சுமார் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை இரண்டாம் தவணை செலுத்த வேண்டியவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அதில் 2 லட்சத்துக்கும் கீழானவர்கள்தான் இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசி போட வேண்டியுள்ளது. அதுவும் நம்மிடம் கையிருப்பில் உள்ளது. மக்கள் தயங்காமல் போட்டுக் கொள்ளலாம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிசெலுத்தப்பட்டத்தை முன்னிட்டு நாளை டெல்லியில் நடைபெறும் சுகாதார துறை சார்ந்த கூட்டத்தில் நானும், துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் பங்கேற்கவுள்ளோம்.
அப்போது, ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரிடம், தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக்கோரி,10 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி வழங்க கோரியும், தடுப்பூசிகளை பாதுகாப்பதற்கான கிடங்குகள் அமைக்கவும், அவற்றை மற்ற மாவட்டங்களுக்கு எடுத்து செல்ல கூடுதல் வாகனங்கள் வாங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கக் கோரியும் கோரிக்கை வைக்கவுள்ளோம்.
பண்டிகை என்றில்லை, பொதுவாகவே ஒன்றரை ஆண்டுகளாக முடங்கி கிடந்ததால், தற்போது பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மக்கள் வெளியே வருவதற்கு அரசு தடைவிதிக்கவில்லை. அதுபோன்று பண்டிகைகளை கொண்டாடுவதற்கு அரசு தடை விதிக்கவில்லை… முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி சந்தோஷமாக பண்டிகைகளை கொண்டாடுங்கள்” என்று கூறினார்.
**-வினிதா**
�,