மேலவளவு முருகேசன் படுகொலை சம்பவத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
1996ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால் 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது முருகேசன் உள்ளிட்ட 7 பேரை வழிமறித்து ஒரு கும்பல் படுகொலை செய்தது.
இதுதொடர்பான வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் 3 பேர் வயது முதிர்வு காரணமாக திமுக ஆட்சிகாலத்தில் பொதுமன்னிப்பு கிடைத்து விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.
மீதமுள்ள 13 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு கடந்த 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு விசிக உள்ளிட்ட பட்டியலின அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் 13 பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சிவஞானம், தாரிணி அமர்வு முன்பு வழக்கறிஞர் ரத்தினம் ஆஜராகி, “மேலவளவு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்தவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அவசர வழக்காக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்ததையடுத்து, மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு இன்று (நவம்பர் 18) விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், “மேலவளவு கொலை வழக்கில் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே 13 பேரும் விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்திருக்கும்போது, எதன் அடிப்படையில் 13 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்தது” என்று கேள்வி எழுப்பினர்.
மேலவளவு கிராமத்தின் தற்போதைய நிலை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “இதுபோலதான் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கிலும் ஆயுள் தண்டனை அனுபவித்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனை காலத்தை தமிழக அரசு எளிதில் கையாண்டு குற்றவாளிகளை விடுவித்தது கண்டனத்திற்குரியது” என்றும் குற்றம்சாட்டினர்.
மேலும், 13 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களுடன் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.�,