குடிமக்களின் பரிவர்த்தனைகள் மூலம் ஊதியம் பெறும் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களை நல்லமுறையில் நடத்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முத்திரைத்தாள் வாங்குவதற்காக, முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் அரசுக்குச் செலுத்தும் தொகைக்குப் பணம் கையாள்வதற்கான கட்டணம் வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கிக்கு தடை விதிக்கக் கோரி முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நேற்று (நவம்பர் 13) நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முத்திரைத்தாள் வாங்குவதற்காக அரசு கருவூலத்துக்குச் செலுத்தப்படும் தொகைக்குப் பணம் கையாளுவதற்கான கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கருவூல இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ள போதிலும், அதற்குப் பதிலளிக்காத வங்கி அலுவலர்களுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அரசு அலுவலர்களின் கடிதங்களுக்கு மதிப்பளித்து பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
வங்கி சார்பில் பதில் மனு தாக்கல் செய்த அலுவலர்கள், மனுதாரர்கள் வேறு வங்கிகளில் கணக்குத் தொடங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியதற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, பொறுப்பற்ற முறையில் ஆணவத்துடன் நீதிமன்றத்துக்குப் பதிலளித்த சம்பந்தப்பட்ட அந்த அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
வாடிக்கையாளர்கள் மற்றும் குடிமக்களின் பரிவர்த்தனைகள் மூலம் ஊதியம் பெறும் வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்களை நல்ல முறையில் கவுரவமாக நடத்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கி பொது மேலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ரிசர்வ் வங்கி உத்தரவில் அரசுடனான பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக் கூறாததால், முத்திரைத்தாள் கொள்முதலுக்காகச் செலுத்தப்படும் தொகைக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவையும், இது தொடர்பான சுற்றறிக்கையையும் அனைத்துக் கிளைகளுக்கும் அனுப்ப பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,