Tஆயுள் கைதிகளுக்கு முன்விடுதலை!

Published On:

| By Balaji

ஆயுள் தண்டனைக் கைதிகள் முன் விடுதலையை உரிமையாகக் கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் 5 ரிமாண்ட் கைதிகளை வெடிகுண்டு வீசிக் கொலை செய்த வழக்கில் சேலம் நீதிமன்றம் இவருக்கு 5 ஆயுள் தண்டனை விதித்தது. இதை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மூர்த்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் 10 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக கடந்த 2018 ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் மூர்த்தியை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி மாரியம்மாள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று(நவம்பர் 20) நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயசந்திரன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது அரசுத் தரப்பில், ”மனுதாரரின் கணவர் மத்திய அரசின் வெடிபொருள் சட்டத்தின் கீழும் தண்டனை பெற்றுள்ளார். இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனை பெறாதவர்களைத்தான் முன்கூட்டிய விடுதலைக்குப் பரிசீலிக்க முடியும். 14 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் சிறைகைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஆலோசனைக் குழு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா காலம் என்பதால் ஆலோசனைக் குழுவின் பரிசீலனை நடக்கவில்லை” எனக் கூறப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ”மனுதாரர் 17 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். ஐந்து ஆயுள் தண்டனை என்றாலும், ஏககாலத்தில்தான் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, முன்கூட்டிய விடுதலை கோர முடியும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ”தண்டனை பெற்றவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாகக் கோர முடியாது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் காலத்திற்கானது. இதில், முன்கூட்டியே விடுதலை என்பது சட்டத்திற்கு உட்பட்ட அரசின் முடிவைச் சேர்ந்தது.

எனவே, ஆயுள் சிறைகைதிகளின் முன்கூட்டியே விடுதலை தொடர்பாக, அரசு விரைவில் சிறை விதிகளுக்கு உட்பட்டுப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட முடிவை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share