fகர்நாடகா: 15 தொகுதி இடைத் தேர்தல் ரத்து!

Published On:

| By Balaji

கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்க இருந்த இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மஜத ஆட்சிக்கு எதிராக இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், அவர்களின் ராஜினாமாவை நிராகரித்த சபாநாயகர் ரமேஷ் குமார், கொறடா உத்தரவை மீறியதாகக் கூறி கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் 17 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால், குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த நிலையில் மஸ்கி மற்றும் ராஜராஜேஸ்வரி தொகுதிகளைத் தவிர கர்நாடகத்தில் காலியாக இருந்த 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவந்தன.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தங்களை அனுமதிக்க வேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சபாநாயகர் உத்தரவு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை 15 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலை ஒத்தி வைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனையடுத்து 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை ரத்துசெய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment