நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் இன்று (நவம்பர் 18) தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ் ஜேத்மலானி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் குப்தா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்களவைப் பொதுத் தேர்தலின் போது ரத்து செய்யப்பட்டு பின் ஆகஸ்டு 5 ஆம் தேதி நடந்த வேலூர் தொகுதி தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவின் கதிர் ஆனந்த் இன்று மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக, கேரள எம்.பி.க்கள் சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா மர்மமான முறையில் மரணம் அடைந்தது பற்றிப் பேசினார். திமுக எம்.பி. கனிமொழி பேசும்போது,
“இந்தியாவின் உயர்கல்வி நிறுவனமான ஐஐடிகளில் கடந்த பத்து வருடங்களில் 52 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். மத்திய அமைச்சரே நாடாளுமன்றத்தில், ‘உயர்கல்வித் துறையில் தீண்டாமைக் கொடுமை தொடர்பாக 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக’ தெரிவித்திருக்கிறார். இது வெட்கக்கேடானது. ஐஐடிகளில் நாம் என்ன கற்பிக்கிறோம்? இந்தக் கல்வி முறை எதை நோக்கிச் செல்கிறது?
இப்போது சென்னை ஐஐடியில் பாத்திமா என்ற மாணவி மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அந்த மாணவியின் பெற்றோர்கள் தங்கள் மகளின் அறைக்குச் செல்வதற்கு முன்பே அந்த அறை சுத்தமாக துடைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த மாணவி தூக்கு மாட்டிக் கொண்டதாக சொல்லப்படும் கயிறு கூட அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டது.
பாத்திமாவின் செல்போனில் ஸ்க்ரீன் சேவ் செய்யப்பட்டு சுட்டிக்காட்டப்பட்ட ஐஐடி பேராசிரியர்கள் மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. அந்தப் பெண் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டியிருக்கும் பேராசிரியர்களை யார் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் அவர்கள் உடனடியாக விசாரணைக்கு அழைக்கப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
இது ஒருபக்கமிருக்க, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் விதிமுறைகளை சரியாக பின்பற்றுவதாக தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதா தள் ஆகிய கட்சிகளைப் பாராட்டினார் பிரதமர்.
மாநிலங்களவையின் 250 வது அமர்வைக் குறிக்கும் சிறப்பு கலந்துரையாடலின் போது சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி,
“இன்று நான் என்சிபி மற்றும் பிஜேடி ஆகிய இரு கட்சிகளைப் பாராட்ட விரும்புகிறேன். இந்த கட்சிகள் நாடாளுமன்ற விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்துள்ளன என்னுடைய கட்சி உள்ளிட்ட பிற கட்சிகள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் ”என்று பிரதமர் மோடி கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மகாராஷ்டிர விவகாரம் தொடர்பாக சந்திக்க செல்வதற்கு சற்று முன்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி பாராட்டுகிறாரே என்று எம்.பி.க்கள் பேசிக் கொண்டனர்.
�,”