cஇறப்பிலும் இணை பிரியாத 100 வயது தம்பதி!

Published On:

| By Balaji

புதுக்கோட்டையில் 100 வயதைக் கடந்த கணவர் உயிரிழந்த சோகத்தில், 100 வயதான அவருடைய மனைவியும் உயிரிழந்துள்ளார். இறப்பிலும் இணை பிரியாத இந்த தம்பதியினர் பற்றிய பேச்சுதான் தற்போது புதுக்கோட்டை முழுவதும் உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குப்பக்குடி ஏ.டி.காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல் (104). இவரது மனைவி பிச்சாயி (100). இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள். அவர்கள் மூலம் பேரன்கள், கொள்ளு பேரன்கள் என குடும்பத்தில் 20க்கும் மேற்பட்டோர் உள்ளனர். நீண்ட காலமாக விவசாயம் செய்து தனது குடும்பத்தைப் பார்த்து வந்துள்ளார் வெற்றிவேல்.

தனது மகன்களில் ஒருவரது வீட்டில் இந்த வயதான தம்பதியினர் வசித்து வந்தனர். வயதானாலும் தங்களது வேலைகளை தாங்களே கவனித்து வந்தனர். கடந்த சில நாட்களாக இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மகன்கள், மகள் உதவியோடு வசித்து வந்தனர்.

இந்நிலையில் வெற்றிவேலுக்கு நேற்று நள்ளிரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர் உயிரிழந்தார். குடும்பத்தின் மூத்த நபர் உயிரிழந்தது அவர்களின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவருக்கு இறுதிச் சடங்கு செய்யும் பணி நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் கணவர் உயிரிழந்ததால் மிகுந்த சோகத்தில் அழுது கொண்டிருந்த அவரது மனைவி பிச்சாயியும் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இருவரது இறப்பும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியினரின் மறைவை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பலரும், அவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share