பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மாவின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மகாத்மா காந்திக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையை சேர்ந்தோருடன் டெல்லியில் நேற்று(அக்.19) பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சி பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதில் இந்தி நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான், கங்கனா ரணாவத், ரகுல் பிரீத் சிங், ஜாக்குலின் பெர்னாண்டஸ், இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானி, இமிதாஸ் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, படைப்பாற்றல் சக்தி அளப்பறியது என்றும், நமது நாட்டின் நலனுக்காக அது பயன்படுத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார். காந்தியின் போதனைகளை பரப்பும் விவகாரத்தில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த பலர் சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.
மேலும், நமது திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு தொழில் மாறுபட்டது மற்றும் துடிப்பானது. சர்வதேச அளவில் அதன் தாக்கமும் மகத்தானது. நமது திரைப்படங்கள், இசை மற்றும் நடனம் மக்களையும் சமூகங்களையும் இணைக்கும் மிகச் சிறந்த வழிகளாக மாறிவிட்டன என மோடி குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சி குறித்து ஷாருக்கான் கூறும் போது, “இதுபோன்ற ஒரு காரணத்திற்காக திரைத் துறையைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்தமைக்காக மிக்க நன்றி. இந்தியாவிற்கும் உலகிற்கும் காந்திஜியை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதில் திரையுலகம் சுய ஆர்வத்துடன் செயல்பட முடியும், மேலும் காந்திஜியின் செய்திகளை பரப்பும் வேலையை உருவாக்குவது முக்கியம். இதில் எப்போதுமே வணிக நோக்கம் கொண்டதாக இருக்கக்கூடாது. மக்களை ஈர்க்கக்கூடிய, பொழுதுபோக்கு முறையில், அனைவரும் இதில் ஈடுபட வேண்டும்” எனக் கூறினார்.
�,”