ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள வங்கிக் கிளைகளுக்குப் பணம் எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் கருவூலத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கும் அதன் கிளைகளுக்கும் பணமானது சாலை மார்க்கமாகவும், ரயில்கள் மூலமாகவும் எடுத்து செல்லப்படுகின்றன. அவ்வாறு எடுத்து செல்லும்போது பணம் திருடப்படுகிற சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதைத் தடுக்கும் வகையில் பணம் எடுத்து செல்லப்படும்போது இரட்டிப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என ஒன்றிய உளவுத் துறை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், ரிசர்வ் வங்கி கருவூலத்திலிருந்து பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்குப் பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும். மேலும், மூத்த வங்கி அலுவலர்களின் ஆலோசனைப்படி பணம் வைத்திருக்கும் வங்கி கருவூலங்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக அண்மையில், தேசிய வங்கிகளின் மூத்த அலுவலர்களோடு நடந்த மாநில அளவிலான பாதுகாப்புக்குழு கூட்டத்தில், பணத்தை எடுத்துச் செல்லும்போது பாதுகாப்புக்குப் போடப்படும் காவலர்களுக்குப் போதுமான ஆயுதங்கள் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை வங்கி அலுவலர்கள் தரப்பில் முன்வைத்துள்ளனர்.
அதனால், சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இயங்கி வருகிற தேசிய வங்கிகளின் கருவூலங்களுக்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்படுகிறதா எனவும் பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்கள் ஆயுதங்களை முறையாக வைத்துள்ளார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,