விதிகளுக்கு உட்பட்டே ‘கோவாக்சின்’ சோதனை: ஐசிஎம்ஆர்!

Published On:

| By Balaji

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராகத் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இந்த மருந்தின் சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்த மருந்தினை மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை நடத்த நாடு முழுவதும் 12 மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை அங்கீகரித்து அனுமதி வழங்கியிருக்கிறது மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் மருந்து பயன்பாட்டுக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசியைத் தயாரித்து சோதனைப்படுத்த சரியான காலக்கெடுத் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் விளக்கமளித்துள்ளது.

அதில், சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு சோதனை நடத்தப்படுகிறது.விலங்குகள், மனிதர்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டே பரிசோதனை செய்யப்படுகிறது. சிவப்பு நாடா (red tape) முறையை ஒழித்துவிட்டு, மிக முக்கியமான நடைமுறைகள் தவிர்த்துவிடாமல், பரிசோதனையில் பங்கேற்கும் நபர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இது மிகவும் சவாலான மற்றும் கடினமான பணி என்று தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உலகெங்கிலும் ஏராளமான தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பு பல்வேறு கட்டங்களில் உள்ளன என்றாலும், உள்நாட்டு தடுப்பூசி வளர்ச்சியை ஊக்குவிப்பது முக்கியம். அதே நேரத்தில் பாதுகாப்பு, தரம், நெறிமுறைகள் அனைத்து ஒழுங்குமுறை ஆகியவற்றை பின்பற்றுவதை உறுதி செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share