லோக்கல் அரசியல்: ஆந்திராவை விட்டு ஓடிய பன்னாட்டு நிறுவனம்!

Published On:

| By Balaji

மாநிலத்தில் அடுத்தடுத்து வரும் ஆட்சித் தலைமைகள் தங்களுக்கு இடையிலான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், முதலீடு செய்ய வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்வதை ஏற்கனவே தமிழ்நாடு பார்த்திருக்கிறது. இப்போது ஆந்திரா பார்த்துக் கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு வந்த நிறுவனங்கள் அடுத்து வந்த அதிமுக அரசின் கொள்கை முடிவு காரணமாக ஆந்திராவின் ஸ்ரீசிட்டிக்கு மாறியது ஏற்கனவே நடந்தது. அதேபோன்று லுலு என்ற ஐக்கிய அரபு நிறுவனம் ஆந்திராவை காலி செய்துகொண்டு வேறு இடம் தேடுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட நிறுவனமான லுலு குரூப் இன்டர்நேஷனல், ‘இனி ஆந்திராவில் எந்தவொரு புதிய முதலீடுகளையும் செய்ய விரும்பவில்லை” என்று அறிவித்திருக்கிறது. காரணம்?

ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கடற்கரை நகரமான விசாகப்படினத்தில் சர்வதேச கன்வென்ஷன் மையம் , ஷாப்பிங் மால், ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுவதற்காக குருப் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தார். இதன் மூலம் ஆந்திராவில் ரூ .2,200 கோடி முதலீடு செய்ய ஏற்பாடானது. இதற்காக ஆந்திர அரசின் சார்பில் நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி, லுலு குழுமத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டை ரத்து செய்வது என முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர மாநில அமைச்சரவை அறிவித்தது.

இதையடுத்து இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள லுலு குழுமத்தின் இந்திய தலைவர் அனந்த் ராம்,

“ இந்த திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான ஆந்திராவின் புதிய அரசாங்கத்தின் முடிவை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். தற்போதைய சூழ்நிலையில், ஆந்திர மாநிலத்தில் எந்த புதிய திட்டங்களுக்கும் முதலீடு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலம் 7,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மிகவும் வெளிப்படையான முறையில் இந்த திட்டத்திற்காக குத்தகைக்கு நிலம் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தை வடிவமைக்க சர்வதேச ஆலோசகர்களையும் கட்டடக் கலைஞர்களையும் நியமிப்பது போன்ற ஆரம்ப திட்ட மேம்பாட்டு செலவினங்களுக்காக நிறுவனம் பெரும் செலவுகளைச் செய்துள்ளது. ஆயினும் ஆந்திர அரசின் முடிவை மதிக்கிறோம்.

அதேநேரம் லுலு குழுமம் இனி ஆந்திராவில் எந்தவொரு புதிய திட்டத்திலும் முதலீடு செய்யாது. உத்தரபிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற பிற மாநிலங்களில் வரவிருக்கும் திட்டங்களில் குழுவின் முதலீடுகள் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் லுலு குழுமத் தலைவர்.

ஏற்கனவே முந்தைய தெலுங்கு தேச அரசின் பல திட்டங்களை ரத்து செய்த ஜெகன் மோகன் ரெட்டி அரசு, இந்த லுலு திட்டத்தையும் ரத்து செய்ததால் முதலீட்டாளர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share