ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் விருப்ப ஓய்வை ஏற்று அவரை பணியிலிருந்து விடுவித்தது தமிழக அரசு.
மதுரை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியராக சிறப்பாக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம். 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பில் சகாயம்(57) இருந்து வந்தார். ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டு காலம் உள்ள நிலையில் சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு கேட்டு கடந்த அக்டோபர் மாதம் விண்ணப்பித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சகாயம் 2001ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். மதுரையில் ஆட்சியராக இருந்த போது, அரசுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் கிரானைட் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். இவ்வாறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இவருக்கு நேர்மையான அதிகாரி என்ற பெயர் இளைஞர்கள் மத்தியில் உண்டு.
தன்னுடைய பணிகளுக்கு இடையே மக்கள் பாதை இயக்கம் அமைப்புடன் இணைந்து மக்கள் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் அவரை அழைத்துக்கொண்டு இருந்தனர்.
தன்னுடைய அனுபவத்திற்கு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் எதிலும் அமர்த்தாமல், சம்பந்தமே இல்லாத பதவியில் 6 வருடங்களாக வைத்திருந்ததால் சகாயம் அதிருப்தியில் இருந்தார். இதன் காரணமாகவே விருப்ப ஓய்வு கேட்டார். இந்த நிலையில் தமிழக அரசுப் பணியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை விடுவித்து தமிழக அரசு இன்று (ஜனவரி 6) அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விருப்ப ஓய்வு பெற்றுவிட்ட சகாயம் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
**எழில்**�,