சிங்களர்களால் மட்டுமே ஜெயித்தேன்: கோத்தபய ராஜபக்‌ஷே

Published On:

| By Balaji

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்‌ஷே இன்று (நவம்பர் 18) வடமத்திய மாகாணத்தின் தலைநகராக விளங்கும் அனுராதபுரத்தில் பதவியேற்றார். புத்தர் கோயிலில் வணங்கிய பிறகு புத்த பிக்குகளின் ஆசிகளுக்குப் பிறகு பதவியேற்றுக் கொண்டார் கோத்தபய ராஜபக்‌ஷே.

பதவியேற்றுக் கொண்ட பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கோத்தபய, “நாட்டின் அதிபராக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டுமே நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எனது வெற்றியில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போதே நான் கோரிக்கை வைத்தேன். ஆனாலும், நான் நினைத்தது போல் அவர்களின் ஆதரவு எனக்குக் கிடைக்கவில்லை.

இப்போது நாட்டின் அதிபராக தமிழ் மக்களிடமும், முஸ்லிம் மக்களிடமும் ஒரு வேண்டுகோளை நான் முன் வைக்க ஆசைப்படுகிறேன். நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தமிழ், முஸ்லிம் மக்கள் என்னோடு கை கோர்க்க வேண்டும். எனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்களை நான் விரைவில் நிறைவேற்றுவேன் ” என்ற கோத்தபய தனது சகோதரரான மஹிந்த ராஜபக்‌ஷேவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து கூறினார்.

“நான் அதிபராகிவிட்டேன். இனி நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். பயங்கரவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் இனி இலங்கை மண்ணில் இடமில்லை. பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பையும் நானே ஏற்று நடத்துவேன். போதைப் பொருள் குற்றங்கள், ஊழல்களை ஒழிப்பேன்” என்று பேசினார் கோத்தபய ராஜபக்‌ஷே.

வெளியுறவுத் துறை குறித்த விஷயத்தில், நாங்கள் எங்கள் வெளிநாட்டு உறவுகளில் நடுநிலை வகிப்போம், உலக சக்திகளின் எந்தவொரு மோதலிலிருந்தும் விலகி இருப்போம்” என்றும் அவர் கூறினார்.

கோத்தபய ராஜபக்‌ஷே அதிபரான பிறகு நாட்டின் அரசு அலுவலகங்களில் பிரதமர் ரணில் படங்களோ தன் படங்களோ வைக்கப்படக் கூடாது என்றும் இலச்சினை படம்தான் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

அதிபர் பதவியின் அதிகாரத்தை கோத்தபய முழுதாகப் பயன்படுத்த வாய்ப்பிருப்பதால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு இனி சிக்கல்கள் அதிகமாகலாம். அதனால் அதிபர் தேர்தலைத் தொடர்ந்து விரைவில் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தலாமா என்ற ஆலோசனை இலங்கை அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share