குலதெய்வ வழிபாடு: 1 லட்சம் பக்தர்கள் பாதயாத்திரை !

Published On:

| By admin

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரப் பாடல் பெற்ற தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 2ஆவது செவ்வாய் கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வருவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் வழிபாடு தடைபட்ட நிலையில் இந்த ஆண்டு மக்கள் வழிபாடு செய்ய வந்துள்ளனர். குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின் படி மக்கள் சீர்வரிசையை பொருட்களை 51 கூண்டு வண்டிகளில் ஏற்றி பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த ஆண்டு பாதயாத்திரையாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர். தாங்கள் வேண்டுதலுக்காகவும் வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோவில் கொடிமரத்தில் செலுத்தினர்.

திருவிழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் மேற்பார்வையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சித் தலைவர் பூங்கொடி செயல் அலுவலர் மருதுபாண்டியன் உத்தரவின்படி குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share