ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ளக் கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வைகோ மனுதாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த மே 22ஆம் தேதி நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பின்னர். தமிழக அரசின் உத்தரவின் பேரில், ஸ்டெர்லைட் ஆலைக்கு மே 28 ஆம் தேதி ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார்.
தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று கூறப்பட்டது எனவே ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மே 31ஆம் தேதி கேவியட் மனு தாக்கல் செய்தது.. அதில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டால், தங்கள் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரப்பட்டது.
இதற்கிடையே, ஸ்டெர்லைட் மூடப்பட்டதற்கான தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஜூலை 3ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுற்றுச்சூழல் விதிகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டுவருவதாகவும் ஆலையிலிருந்து வெளியேறும் புகை அல்லது கழிவுகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்துள்ள வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள அனுமதி கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று (ஜூலை 13) மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு டெல்லியில் உள்ள தேசிய பசுiத் தீர்ப்பாயத்தில் ஜூலை 18ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்று வைகோ தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராகி வாதாடவுள்ளார்.�,