அடுத்த காலாண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்பு 50 சதவிகிதம் அதிகரிக்கும் என்று ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் நியமன நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் வெளியான மத்திய அரசின் பணமதிப்பழிப்பு அறிவிப்பின் காரணமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வேலைவாய்ப்புத் துறை மந்த நிலையில் இருந்தது. இந்த காலகட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல்வேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல, சில நிறுவனங்கள் ஆட்களை குறைத்துவிட்டன.
தற்போது பணத் தட்டுப்பாடு நீங்கியதால் வங்கிகள், நுகர்பொருள் துறை, உள்கட்டமைப்பு, சில்லறை வர்த்தகம், இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக வேளாண்மை சார்ந்த துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது. முன்னணி ஆட்சேர்ப்பு நிறுவனங்களான டீம்லீஸ் சர்வைசஸ், ஏ.பி.சி. கன்சல்டண்ட்ஸ், குயீஸ் கார்ப், அண்டல் இண்டர்நேஷனல், பீப்புள் ஸ்ட்ராங் மற்றும் தி ஹெட் ஹண்ட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்த நிதியாண்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அண்டல் இண்டர்நேஷனல் நிறுவன நிர்வாக இயக்குநரான ஜோசப் தேவசியா கூறுகையில், “எங்களது நிறுவனம் வருகிற ஏப்ரல் – ஜூன் காலாண்டில் அதிரடியாக மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது 50 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும். குறிப்பாக பணமதிப்பழிப்புக்குப் பின்னர் வேளாண்மை சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.�,