மிடில் கிளாஸ் சிவகார்த்திகேயனுக்கும் ‘ஹை-ஃபை’ நயன்தாரவுக்கும் இடையே ஈகோவினால் உண்டாகும் மோதல் பின் காதலாக மாறுவதே மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை.
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், சதிஷ், ஹரிஜா ஆகியோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன், கலை: சுப்ரமணிய சுரேஷ், சண்டைப் பயிற்சி: அன்பறிவு.
ஹூண்டாய் நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக வேலை பார்க்கும் சிவகார்த்திகேயனின் அம்மா ராதிகா, தனது பிறந்தநாள் விருப்பமாக சீரியல் நடிகை ஒருவரைப் பார்க்க வேண்டுமெனக் கூறுகிறார். தாய் சொல்லைத் தட்டாத பிள்ளையாக, சிவகார்த்திகேயன் அம்மாவை அழைத்துச் செல்கிறார். வழியில் ஏற்படும் ஒரு சின்ன விபத்தில் தொடங்கும் நயன்தாரா – சிவகார்த்தி மோதல்; மெகா சீரியல் போலச் செல்கிறது. ஈகோ, சண்டை, போட்டி போட்டுப் பழிவாங்குவது, கலாய்ப்பது, பின் காதலாக மாறுவது என இந்தச் சண்டையே இரண்டரை மணி நேர எபிஸோடாக விரிகிறது.
ஸ்டூடியோ க்ரீன் – சிவகார்த்திகேயன் – நயன்தாரா – ராஜேஷ் என வலுவான கூட்டணியுடன் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியாகியிருக்கும் மிஸ்டர் லோக்கல், அவற்றைப் பூர்த்தி செய்திருக்கிறதா என்றால், ஏமாற்றமே.
கதை இல்லாவிட்டாலும் நகைச்சுவையை மட்டுமே வைத்து சுவாரஸ்யமாகப் படத்தை நகர்த்துவதற்குப் பெயர் பெற்றவர் இயக்குநர் ராஜேஷ். சில சறுக்கல்களுக்குப் பின் இம்முறை மிஸ்டர் லோக்கலில் இழந்த தனது டிரேட் மார்க்கை மீண்டும் நிரூபிக்க வந்துள்ளார். ஆனால் சென்ற படங்களில் செய்த அதே தவறுகளை எந்த அப்டேட்டுமின்றி மீண்டும் கொடுத்திருக்கிறார்.
காமெடிக்குப் பெயர் பெற்ற மெகா கூட்டணி இருந்தும் சிரிப்பே வராத நகைச்சுவைக் காட்சிகளால் நிரம்பியிருக்கிறது மிஸ்டர் லோக்கல். மன்னன் உள்ளிட்ட ரஜினிகாந்த் நடித்த சில படங்களின் காட்சிகள் மிஸ்டர் லோக்கல் பார்க்கும்போது நினைவுக்கு வருகின்றன. சாதாரண நகைச்சுவைப் படமாக மட்டுமில்லாமல் நீர்த்துப்போன மிடில் கிளாஸ் மனோபாவத்தை மீண்டும் திரையில் கட்டமைத்திருப்பதின் மூலம், மிஸ்டர் லோக்கல் அபத்தமான, ஆபத்தான படமாகவும் இருக்கிறது.
கதையின் முரணாக கட்டமைத்திருப்பது நயன்தாராவின் கதாபாத்திரம். தாய், தந்தையை சிறு வயதிலேயே இழந்த நயன்தாரா, தனது முயற்சியால் வளர்ந்த ஒரு தொழிலதிபர். சுயமாய் சிந்திக்கும், சென்டிமென்ட்டுகளுக்கு இடமளிக்காத அவரது கேரியர் வாழ்கையில், கதாநாயகன் நுழைந்து காதல் என்ற பெயரில் அதனைத் திருத்தி நல்(தன்)வழிப்படுத்துதலே முரணை தீர்க்கும் தீர்வாகச் சொல்லியிருக்கிறார்கள்.
நயன்தாரா சிவகார்த்திகேயனிடம் தான் தேர்ந்தெடுத்த ஆணும் ஓர் ஆணல்ல என கிளைமாக்ஸில் தெரியப்படுத்தும் இடத்தை, நகைச்சுவைக் காட்சியாகச் சித்தரித்திருப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை இயக்குநரிடம்தான் கேட்க வேண்டும்.
கதைகளே இல்லாவிட்டாலும் சுவாரஸ்யமான, நம்பகத்தன்மை கொண்ட திரைக்கதைகள் வரும் போது தமிழ் ரசிகர்கள் அப்படங்களைக் கொண்டாடத் தவறியதில்லை. அறிவியலுக்கு எதிரான பேய்ப் படங்களாகவே இருந்தாலும் வலுவான கதை, திரைக்கதை இருந்தால் ரசிகர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வார்கள். மாறாக எழுத்தில் எந்த மெனக்கெடலும் இல்லாமல் நாளைய சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டார் போன்ற பிராண்டுகளே வந்து நடித்தாலும் ரசிகர்கள் ஏமாறவும் மாட்டார்கள், விளம்பரப் பலகையைச் சீந்தவும் மாட்டார்கள்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/56)
**
.
.
�,”