i‘வாழ்த்து மழை’யில் ரோஹித்: காரணம் என்ன?

Published On:

| By Balaji

இந்திய கிரிக்கெட் வீரரான ரோஹித் ஷர்மாவை திடீர் வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர் சமூக வலைதள மக்கள்.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் தற்போது நடந்துவருகிறது. இதில் நான்காவது ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் அபாரமாக விளையாடி 162 ரன்களைக் குவித்த இந்திய அணியின் ரோஹித் ஷர்மா அந்தப் போட்டியில் இந்தியா வெல்ல முக்கியக் காரணகர்த்தாவாக இருந்தார்.

இந்தத் தொடரில் முதல் போட்டியில் 150+ ரன்கள் அடித்து வெற்றிக்குக் காரணமாக இருந்த நிலையில் நான்காவது போட்டியிலும் 150+ ரன்களைக் குவித்து வெற்றிக்கு உதவியதால் வெகுவாகப் பாராட்டப்பட்டார் ரோஹித். மழை நின்றும் தூவானம் விடாத கதையாக இந்தப் போட்டி முடிந்து சில நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும்கூட மீண்டும் ரசிகர்களின் திடீர் பாராட்டுக்கு ஆளாகிவருகிறார் ரோஹித்.

அதற்குக் காரணம் ,ரோஹித் களத்தில் நடந்துகொண்ட விதம். அதாவது , நான்காவது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது கேலரியில் பார்வையாளர்கள் திடீரென “ரோஹித்… ரோஹித்…” என கூச்சல் போட ஆரம்பித்தனர். உடனே ரோஹித், தன்னை புகழ வேண்டாம், இந்தியாவைப் புகழுங்கள் எனத் தெரிவிக்கும் விதமாகத் தனது டீசர்ட்டில் உள்ள ‘இந்தியா’ எனும் வாசகத்தை பார்வையாளர்களிடம் சுட்டினார்.

அதுவரை “ரோஹித்… ரோஹித்…” என ஆர்ப்பரித்த மக்கள் அதன் பின்னர், “இந்தியா… இந்தியா…” எனக் கத்த ஆரம்பித்தனர். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வலம்வருகின்றன.

பிறர் தன்னை பேணுங்கால் நாணல்போல தனக்கு புகழைத் தேடிக்கொள்ளாமல் எல்லாப் புகழும் இந்தியாவுக்கே எனத் தெரிவிக்கும் தொனியில் இந்தியாவை முன் நிறுத்தி ஒதுங்கிக்கொண்ட ரோஹித்தின் இந்த செயல்பாடு சமூக வலைதளங்களில் புதிய கவனத்தையும் பாராட்டையும் பெற்றுவருகிறது. பலர் அவருக்கு வாழ்த்துகளையும் கூறிவருகின்றனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share