சென்னையில் டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான புதிய வழித்தடச் சேவை தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை டிஎம்எஸ் வரை தற்போது மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த சேவை வண்ணாரப்பேட்டை வரை நீட்டிப்பதற்கான பணிகள் நடந்து முடிந்து, கடந்த 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், பிப்ரவரி 2ஆவது அல்லது 3ஆவது வாரத்தில் மெட்ரோ ரயில் தட நீட்டிப்புச் சேவையின் தொடக்க விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 10ஆம் தேதியன்று பிரதமர் மோடி திருப்பூர் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 19ஆம் தேதியன்று அவர் கன்னியாகுமரி அல்லது சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “பிப்ரவரி 19ஆம் தேதி பிரதமர் சென்னை வருவது உறுதி செய்யப்பட்டால், அவர் மெட்ரோ ரயில் விழாவில் கலந்துகொள்வார். அப்படி இல்லையென்றால், பிப்ரவரி 10ஆம் தேதியன்று காணொளி மூலம் அவர் திறப்புவிழாவில் பங்கேற்பார். இது குறித்து, இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வெளியாகும்” என்று சென்னை மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய தனியமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிடோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் பங்கேற்பு உறுதியானதும் விழாவுக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் என்று மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.�,