கூடுதலாக மாசு வெளியேற்றிய காரணத்தினால் சேலத்திலுள்ள ஜே.எஸ்.டபிள்யூ. உருக்கு ஆலையில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி கிராமத்தில் ஜிண்டால் குழுமத்தின் துணை நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) என்ற உருக்காலை உள்ளது. இந்த ஆலையில், மண்ணிலிருந்து தாதுகளைப் பிரித்தெடுத்து கட்டடங்களுக்குத் தேவைப்படும் இரும்பு கம்பிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் இருந்து தினமும் 5,000 டன் வரை டி.எம்.டி கம்பிகள் உற்பத்தியாகின்றது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய தனியார் உருக்காலையாக விளங்கும் இந்த நிறுவனத்தில் வட இந்தியர்களே அதிகம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம், மேச்சேரி சுற்றுப்பகுதியில் 3,000க்கும் மேற்பட்டோர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்த ஆலையின் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அனுப்பிவந்த நிலையில், சமீபத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இந்த ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆலையிலிருந்து வெளியேறும் மாசு அளவு கூடுதலாக இருப்பதால், அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆலை நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தினர். ஆனால், மாசு வெளியேற்றத்தைக் குறைக்க நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், உற்பத்தியை நிறுத்தக் கோரி கடந்த வியாழனென்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலைக்கு நோட்டீஸ் கொடுத்தது. எனினும், ஆலை நிர்வாகம் உற்பத்தியை நிறுத்தாமல் செயல்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், மேட்டூர் கோட்டாட்சியர் லலிதாவுக்கு அறிக்கை அனுப்பிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஜே.எஸ்.டபிள்யூ ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டிக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் மேட்டூர் கோட்டாட்சியர் உத்தரவுப்படி, ஆலையின் மின் இணைப்பை மின் வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். இதனால், ஆலையின் முழு உற்பத்தியும் நேற்று (மார்ச் 10) முதல் முடங்கியது.
இதுகுறித்து, மேட்டூர் கோட்டாட்சியர் லலிதா செய்தியாளர்களிடம் பேசும்போது, “மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகளின் படி ஆலை நிர்வாகம், மாசுவைக் குறைக்க வேண்டிய சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் வாரியம் ஆய்வு செய்யும்போது, உரிய விதிமுறைகளின் படி ஆலையிலிருந்து வெளியேறும் மாசின் அளவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே, மீண்டும் உற்பத்தியைத் தொடங்க அனுமதியும் மின் இணைப்பும் கொடுக்கப்படும்” என்று கூறினார்.�,