iபுதுவை முதல்வர் கோரிக்கை: ஆளுநர் ஏற்பு?

Published On:

| By Balaji

டெல்லியிலிருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இன்று அவசரமாகப் புதுச்சேரி திரும்புகிறார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மக்கள் திட்டங்கள் உட்பட 39 கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 13ஆம் தேதி மதியம் முதல் ஆளுநர் மாளிகை எதிரில் தொடர் போராட்டத்தை நடத்திவருகிறார். இந்தப் போராட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மற்ற கட்சியினர் பலர் பங்கேற்றுள்ளார்கள். ஆளுநர் மாளிகைக்கு வெளியே போராட்டம் நடந்ததால் கிரண்பேடியின் நிலை வீட்டுக்காவலில் வைக்கப்போட்டவர் போல இருந்த நிலையில், ராணுவத்தினரை வரவழைத்து பிப்ரவரி 14ஆம் தேதி காலையில் பலத்தப் பாதுகாப்போடு நான்கு நாட்கள் பயணமாக டெல்லி சென்றார்.

கிரண்பேடி தனது முகநூலில் வழக்கம்போல முதல்வருக்கு எதிராகப் பதிவிட, அது ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களின் கோபமும் துணைநிலை ஆளுநருக்கு எதிராகத் திரும்பியது. மாநிலம் முழுவதும் பலர் போராட்டம் செய்ய முன்வந்தார்கள், ஆனால் முதல்வர் அனைவரையும் அழைத்து போராட்டங்கள் எதுவும் வேண்டாம்; சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அமைதிப்படுத்தினார். ஆளுநர் – முதல்வர் அதிகார மோதல்கள் அதிகரித்ததை அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கிரண்பேடியைத் தொடர்புகொண்டு உடனடியாகப் புதுச்சேரி புறப்படுங்கள் அங்குள்ள பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துவையுங்கள் என்று கோபமாகச் சொன்னதாகச் சொல்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

இதனையடுத்து, 21ஆம் தேதி புதுச்சேரிக்கு வருவதாகவிருந்த கிரண்பேடி டெல்லியில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இன்றே அவசரமாகப் புதுச்சேரி புறப்பட்டு வந்து முதல்வர் நாராயணசாமியைச் சந்திக்கிறார். முதல்கட்டமாக 10 கோரிக்கைகளை நிறைவேற்ற இருப்பதாகச் சொல்கிறார்கள் ஆளுநர் மாளிகையில் உள்ளவர்கள்.

கிரண்பேடி வரும்போது புதுச்சேரி எல்லையில் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் அறிந்து, அதிகாரிகள் மூலமாக முதல்வரிடம் சொல்லி தடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள் புதுச்சேரி காவல் துறையினர். இதன்மூலம், கடந்த ஐந்து நாட்களாகப் புதுச்சேரியில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையில் நீடித்து வந்த மோதல் போக்கை இன்றோடு முடித்து வைக்கவுள்ளார் கிரண்பேடி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share