குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் தடையை மீறி பப்ஜி விளையாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பப்ஜி விளையாட்டு இளைஞர்களையும், மாணவர்களையும் பெரியளவில் பாதிக்கிறது. அதனால் அதைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து, முதல் முறையாகக் குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் என்ற பகுதியில் கடந்த 6ஆம் தேதி பப்ஜி விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை மீறுபவர்கள் மீது சட்டப்பிரிவு 144 மற்றும் 37(3) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்திருந்தனர். இதை சிறப்புக் குழுவொன்று கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், காலவட் சாலையில் அமைந்துள்ள கல்லூரியுடன் இணைக்கப்பட்ட உணவகம் ஒன்றில் 19-25 வயதிற்குட்பட்ட 10 இளைஞர்கள் பப்ஜி விளையாடுவதை போலீசார் பார்த்துள்ளனர். இதையடுத்து, நேற்று(மார்ச் 13) 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பப்ஜி கேம் விளையாடியதை உறுதி செய்ய அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, தடையை மீறியதற்காக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஆறு பேர் மாணவர்கள் என்பதால், அவர்களை மட்டும் அன்றே ஜாமீனில் விடுவித்தனர். மற்றவர்களை வெளியே விடுவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து சிறப்புக் குழுவின் இன்ஸ்பெக்டர் ரோஹித் கூறுகையில், இந்த விளையாட்டு இளைஞர்களை மிகவும் அடிமைப்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று நாங்கள் அவர்கள் அருகில் வருவதைக் கூட கவனிக்கவில்லை. அந்தளவுக்கு விளையாட்டில் மூழ்கியுள்ளனர் என கூறினார்.
�,