பன்னாட்டு விமான சேவைகள் வருகிற 27ஆம் தேதி தொடங்குவதையடுத்து சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை உள்பட அனைத்து விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
உலகமெங்கும் கொரோனா முதல் அலை காரணமாக பன்னாட்டு விமான சேவை கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் முதல் அலை முடிந்த பின் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டது. ஆனால், பன்னாட்டு விமான சேவைகள் ‘வந்தே பாரத்’ எனும் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தொற்று நாடு முழுவதும் முழுமையாக குறைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் வழக்கமான பன்னாட்டு விமான சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா மூன்றாவது அலை, ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக விமான சேவைகள் இயக்குவது தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மூன்றாவது அலை முடிவுக்கு வந்து இயல்பான சூழ்நிலை திரும்பியுள்ளதால், வருகிற 27ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான சேவைகள் தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் விமான நிலைய ஆணையக அதிகாரிகளும், விமான நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
இதையொட்டி, பன்னாட்டு சேவைகள் தொடங்குவது குறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையக இயக்குநர் சரத்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஆணையக அதிகாரிகள், குடியுரிமை, சுங்க இலாகா, மத்திய தொழில் பாதுகாப்புத் துறை உள்பட அனைத்து விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப்பின் பேசிய விமான நிலைய அதிகாரிகள், “சர்வதேச விமான சேவையைத் தொடங்க தயார் நிலையில் உள்ளோம். சர்வதேச பயணியரை கையாளுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. குடியுரிமை அனுமதி உள்பட விரைவான சேவையை வழங்கவும், உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விமான நிறுவனங்களிடமும், ஆலோசனைகள் கேட்கப்பட்டன. சர்வதேச விமான சேவையின்போது, பயணியருக்கு எந்த குறைபாடும் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள விமான நிறுவன பிரதிநிதிகள், “சர்வதேச விமான நிறுவனங்களும் சேவையைத் தொடங்க தயார் நிலையில் இருக்கின்றன. சென்னையில் இருந்து, 27 விமான நிறுவனங்கள், பல நாடுகளுக்கு விமானங்களை இயக்குகின்றன. பயணியர் முன்பதிவு தொடர்பாக விமான நிறுவனங்கள் தங்களது இணையதளத்தில் தகவல்கள் வெளியிட்டுள்ளன. விமான நிறுவனங்கள் வரும் 27ஆம் தேதி முதல் வழக்கமான சேவையைத் தொடங்குகின்றன. சில நிறுவனங்கள் மட்டும் மே மாதம் முதல் சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது” என்று தெரிவித்தனர்.
**-ராஜ்**
.