நடப்பு ரபி பருவத்தில் கோதுமை விதைப்புப் பரப்பு சென்ற ஆண்டு அளவை எட்டியுள்ள நிலையில், நெல் விதைப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான ரபி பருவ பயிர் விதைப்பு குறித்த விவரங்களை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரையில், 298.47 லட்சம் ஹெக்டேர் பரப்புக்குக் கோதுமை விதைக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே கால அளவுக்கு (299.84 லட்சம் ஹெக்டேர்) கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. கோதுமை விதைப்பைப் பொறுத்தவரையில், உத்தரப் பிரதேசத்தில் 99.13 லட்சம் ஹெக்டேர், மத்தியப் பிரதேசத்தில் 59.11 லட்சம் ஹெக்டேர், பஞ்சாபில் 35.02 லட்சம் ஹெக்டேர், ஹரியானாவில் 25.16 லட்சம் ஹெக்டேர், பிகாரில் 22.56 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் விதைக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டின் இதே காலத்தில் நெல் விதைப்புப் பரப்பு 39.64 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், இந்த ஆண்டில் விதைப்புப் பரப்பு 33.96 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. பருப்பு விதைப்புப் பரப்பு 166.11 லட்சம் ஹெக்டேரிலிருந்து 156.30 லட்சம் ஹெக்டேராகவும், எண்ணெய் வித்துப் பயிர்களின் விதைப்புப் பரப்பு 80.98 லட்சம் ஹெக்டேரிலிருந்து 80.40 லட்சம் ஹெக்டேராகவும் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரபி பருவத்தின் இதுவரையிலான காலத்தில் 617.83 லட்சம் ஹெக்டேர் பரப்புக்குப் பயிர்கள் விதைக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டில் இதன் அளவு 643.60 லட்சம் ஹெக்டேராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,