தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற அறிக்கையை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் தமிழக அரசின் விருப்பம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல என மத்திய நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான இந்த அறிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து இந்த அறிக்கையை நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ளது சட்ட விரோதம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே முழு அளவில் ஆய்வு நடத்தி, அங்கு நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு ஸ்டெர்லைட் நிறுவனம்தான் காரணம் என உறுதி செய்யப்பட்டதாலேயே அந்த ஆலையை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (நவம்பர் 15) மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட்ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற மத்திய அரசின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் தமிழக அரசின் விருப்பம் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான இந்த வழக்கை உச்ச நீதிமன்றம்தான் விசாரிக்க முடியும் என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் நவம்பர் 19ஆம்தேதிக்குத் தள்ளி வைத்தனர் நீதிபதிகள்.�,