Iநியூட்ரினோ: இடைக்காலத் தடை!

Published On:

| By Balaji

தேனியில் நியூட்ரினோ திட்டம் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்த வழக்கில், இத்திட்டத்தைச் செயல்படுத்த இடைக்காலத் தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க 2011ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைக்கப்பட இருந்த இந்த ஆய்வகத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கின. 2.5 கீ.மீ தூரத்திற்குச் சுரங்கம் அமைத்து இந்த ஆய்வகம் அமைக்க இருந்தது. இதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீதான மதிப்பீட்டு ஆணையம் அனுமதி மறுத்த நிலையில், டாடா நிறுவனம் அளித்த மனுவை ஏற்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. மத்திய அரசின் 12ஆவது ஐந்தாண்டு திட்டத்தின்கீழ் 1,500 கோடி ரூபாயை இதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவேண்டும். பொதுமக்களின் கருத்தைக் கேட்ட பிறகு நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளுக்குப் புறம்பாக இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி ராகுவேந்திர எஸ் ரத்தோர் அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. ஆனால் டாடா நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீதான மதிப்பீட்டு ஆணையம் ஆகியவை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (நவம்பர் 2) வழங்கியுள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ராகுவேந்திர எஸ் ரத்தோர் தலைமையிலான அமர்வு.

நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம். நியூட்ரினோ திட்டத்தால் வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தேசிய வன உயிரின வாரியம் அனுமதி அளித்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அளித்த அனுமதிக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறிய பசுமை தீர்ப்பாயம், மத்திய அரசு மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share