iதோல்வி எதிரொலி: அமமுக ஆலோசனைக் கூட்டம்!

Published On:

| By Balaji

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்குக் கடும் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமமுக, போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியதோடு மட்டுமல்லாமல், 22.25 லட்சம் வாக்குகளையே பெற்றது. இடைத் தேர்தலில் அதிமுக ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி பறிபோகும் என்று தினகரனின் எதிர்பார்ப்பும் பொய்த்தது.

அமமுகவின் படுதோல்வி, இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி என இரண்டும் தினகரனை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால்தான் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனே செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்குப் புன்னகையுடன் பதில் கொடுக்கும் தினகரன், தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு நாட்களாகியும் இதுவரை செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லை. தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது. பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம்” என்று மட்டும் பதிவிட்டுவிட்டு அமைதியாக இருக்கிறார்.

இந்த நிலையில் தோல்வி குறித்து ஆராய்வதற்காக அமமுக ஆலோசனைக் கூட்டம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமமுக தலைமைக் கழகம் நேற்று (மே 25) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜெயலலிதாவின் மக்கள்நலக் கொள்கைகளை வாழவைக்க தொடர்ந்து போராடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 01.06.2019 (சனிக்கிழமை) காலை 10.00 மணி அளவில், கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில், சென்னை, அசோக் நகர், நடேசன் சாலையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் அமமுகவுக்கு ஒரு வாக்குகள்கூட விழவில்லை என்று கூறப்படுகிறது. இதை அமமுகவின் தேனி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தார். அமமுக முகவர்கள் 15 பேர் இருக்கும் ஒரு வாக்குச் சாவடியில் தனக்கு ஒரு வாக்கு கூட விழவில்லை என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அமமுகவுக்கு ஒரு வாக்குகள் கூட பதிவாகாத வாக்குச் சாவடிகளின் விவரங்கள், அங்கு வாக்குச் சாவடி முகவராக இருந்தவர்கள், அவர்களின் குடும்பத்தில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை அந்தந்தப் பகுதி பொறுப்பாளர்களிடம் தினகரன் கேட்டிருக்கிறார். அவை வந்தவுடன் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை செய்து சில அதிரடி முடிவுகளை எடுக்கவுள்ளார் தினகரன்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!](https://minnambalam.com/k/2019/05/25/81)

**

.

**

[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)

**

.

**

[மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?](https://minnambalam.com/k/2019/05/225/55)

**

.

.

**

[மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?](https://minnambalam.com/k/2019/05/25/25)

**

.

**

[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)

**

.

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share