அரசுப் பள்ளியில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சமையலராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்’ என்று கற்பிக்கப்படும் பள்ளியிலேயே தற்போது தீண்டாமை அதிகமாகப் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தீண்டாமை பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சேலத்தில் உள்ள அரசுப் பள்ளியிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட குப்பன்கொட்டாய் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சத்துணவுச் சமையலராகப் பணியாற்றி வந்தவர் ஓய்வுபெற்ற நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் அப்பள்ளியின் சமையலராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
10 ஆண்டுகளுக்கும் மேல் கே.மோரூர் மேல்நிலைப் பள்ளியில் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வந்த ஜோதி என்பவர், பதவி உயர்வு பெற்று இப்பள்ளியின் சமையலராகத் தன்னுடைய பணியைக் கடந்த வாரம் தொடங்கினார்.
ஆனால், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிடுவதை ஏற்க முடியாது என்று கூறிய சாதி இந்துக்கள் சிலர், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் ஜோதியையும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சத்துணவு அமைப்பாளர் ஜோதியை இடமாற்றம் செய்ய வலியுறுத்துவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நேற்று கண்டனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து, தீவட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஜோதி.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தீவட்டிபட்டி காவல் துறையினர் தேவன், சின்னத்தம்பி, மகேந்திரன் ஆகிய மூன்று பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் சாதி இந்து பெற்றோர்களுக்கு உதவியாக செயல்பட்டதாகக் கூறி, பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் பெற்றோர்கள் அம்மாசி, வெங்கடேசன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.�,