முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் இல்லத் திருமண விழா தஞ்சையில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளோடு சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளருமான திவாகரனும் கலந்துகொண்டார்.
அப்போது ஸ்டாலின் முன்னிலையில் பேசிய திவாகரன், ‘இன்று தமிழ்நாட்டின் நிலை மிக கேவலமாக உள்ளது. கன்னடத்திலிருந்து வந்த ஒருவன், பெரியாரைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்குத் துணிச்சல் வந்துள்ளது. இதுவே நாம் யாராவது கர்நாடகாவில் சென்று அந்தத் தலைவர்கள் பற்றி பேசிவிட்டு வெளியே வர முடியுமா?” என்று ரஜினியை விமர்சித்தார்.
மேலும், “திராவிட இயக்கத் தலைவர்கள் ஒருவர், ஒருவராக மறைந்ததால் இந்த நிலை வருகிறது. தமிழ், தமிழகம்தான் நமக்கு முதல் முக்கியம். அதைக் காப்பவர்களுக்குப் பின் நாம் நிற்க வேண்டும். தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தைக் காக்க வேண்டும். அதைக் காக்கும் ஒரே சக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்” என்றும் திவாகரன் பேச, அதே மேடையில் திவாகரன் திமுகவில் இணைய வேண்டுமென ஸ்டாலின் சூசகமாக அழைப்பு விடுத்தார்.
சசிகலாவின் சகோதரர் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசிய விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் முக்கியமாகக் கவனிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல்கள் அனைத்தும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும் சென்றுள்ளது. இதையடுத்து, சிறையில் சந்திக்க வந்த உறவினர் ஒருவரிடம், திவாகரன் குறித்து கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா.
“திவாகரன்கிட்ட போய் சொல்லுங்க. அவர் பையன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிட்டிருந்தார். நானும் வர்றேன்னு சொல்லியிருந்தேன். அவர் பேசினதைப் பார்த்ததுக்கு அப்புறம் எப்படி என்னால் கல்யாணத்துக்கு வர முடியும். வர முடியாதுன்னு சொல்லிடுங்க” என்றவர், திவாகரன் மீதான தன் மொத்த கோபத்தையும் கொட்டியுள்ளார்.
“திமுக ஆட்சிக்கு வரணும்னு எப்படி திவாகரன் பேசலாம். இவ்வளவு வசதி வாய்ப்பு வந்ததுக்குக் காரணம் அக்காவும் (ஜெயலலிதா) அதிமுகவும்தான். அதிமுகன்னு ஒண்ணு இல்லைன்னா எப்டி இருந்திருப்போம்னு அவருக்கு தெரியும்ல. அதுமட்டுமில்ல, திமுக போட்ட வழக்குனாலதான் நான் இப்ப ஜெயில்ல இருக்கேன். அக்காவும் உயிரோட இருந்திருந்தா இந்நேரம் ஜெயில்லதானே இருந்திருப்பாங்க. அதுகூடவா அவருக்குத் தெரியாது” என்றதோடு,
“சட்டமன்றத் தேர்தல்ல ஒரத்தநாடு தொகுதியில வைத்திலிங்கம் தோற்கணும்னு அத்தன வேலை பாத்தாரு. அக்காவுக்கு அப்பவே திவாகரன் மேல கோபம். நான் ஒருத்தரை நிறுத்தினா… நீ தோற்கடிப்பியான்னுதான் வைத்திலிங்கத்துக்கு எம்.பி பதவி கொடுத்தாங்க. இப்ப நான் ஜெயில்ல இருக்குறதுக்கு காரணமான திமுக ஆட்சிக்கு வரணும்னு சொல்லியிருக்காரு. திவாகரனை எதுக்காக அக்கா ஒதுக்கி வெச்சிருந்தாங்கன்னு இப்பதான் தெரியுது” என்று கடுமையாக கூறியுள்ளார்.
அவரை சமாதானப்படுத்த அந்த உறவினர் முயல, ரஜினியை விமர்சித்ததையும், தன் குற்றச்சாட்டுக்களோடு சேர்த்துக்கொண்டார் சசிகலா. “ரஜினியையும் அவன், இவன்னு பேசியிருக்காரு. நான் இங்க கர்நாடகாவுல இருக்கிறேன். இதைக் கேள்விப்பட்டு ஜெயிலுக்குள்ள இருக்குற ரஜினி ரசிகர்கள் என்ன தாக்க வந்தாங்கன்னா, என்னோட உயிருக்கு என்ன நிச்சயம். இதையெல்லாம் பார்க்காம இஷ்டத்துக்குப் பேசியிருக்காரு. இப்படில்லாம் இருக்கறவரு வீட்டுக் கல்யாணத்துக்கு என்னால எப்படி வர முடியும். அதனால் வர முடியாதுன்னு சொல்லிடுங்க” என்று சொல்லி அனுப்பியுள்ளார்.
இந்தத் தகவல் தெரிந்து கலக்கத்தில் இருக்கிறார் திவாகரன் என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரங்களில்.�,