தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (நவம்பர் 2) செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா. அப்போது, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்று வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், இதர பகுதிகளில் இன்று பருவமழை தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்தம் நீடிக்கிறது. தென் தமிழகத்திலும் அதனையொட்டியுள்ள பகுதியிலும் மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோரக் கர்நாடகாவில் மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது.
இதனால் வடகிழக்குப் பருவமழை தமிழ்நாடு மற்றும் கேரளா, தெற்கு உள் கர்நாடகா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளில் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில், வரும் 6ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. அடுத்து வரும் 3 நாட்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை ஏதும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
**தீபாவளி அன்று மழை?**
தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான், தனது முகநூல் பக்கத்தில் மழை குறித்துப் பதிவிட்டுள்ளார். மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருக்கும் தாழ்வுப்பகுதியானது, கன்னியாகுமரி கடற்பகுதியை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் வெப்பச் சலனத்தால் மழை பெய்யும். அதன்பின் மழை மெல்ல நகர்ந்து தென் மாவட்டங்களை நோக்கிப் பெய்யும்.
இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெருமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாகத் தென் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் பெருமழை இருக்கும். ஒரு சில இடங்களில் மிகப் பெருமழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக ஒருநாள் மழையை எதிர்பார்க்கலாம்.
அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மழை பற்றிய தெளிவான தகவல் கிடைத்துவிடும். அதனால் தீபாவளிப் பண்டிகையன்று தமிழகத்தில் பெரும்பாலும் பெரிய அளவுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை” என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,”