சமூக வலைதளங்களும் நாமும் – 10: நவீனா
ஒரு மாலை நேரம் பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சியின்போது ஒரு தாயையும் அவருடைய பெண் குழந்தையையும் சந்தித்தேன். அந்தத் தாய் தன் குழந்தையை அங்கு விளையாடிக்கொண்டிருந்த மற்ற குழந்தைகளோடு சென்று விளையாடுமாறு கெஞ்சிக்கொண்டிருந்தார். ஆனால், அந்த குழந்தை பெஞ்ச் ஒன்றில் அமர்ந்துகொண்டு, கீழே இறங்க மறுத்து அழுதபடி பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தது. இதுபற்றி அந்தக் குழந்தையின் தாயிடம் கேட்டபோது, அந்தக் குழந்தை நான்கு வயதாகியும் இன்னும் பேசவில்லை என்றும் அந்தக் குழந்தைக்கு ‘ஸ்பீச் தெரபி’ கொடுக்கும் மருத்துவர், அந்தக் குழந்தையை மற்ற குழந்தைகளோடு அதிகம் விளையாட விடும்படி அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரியவந்தது. ஆனால், அந்தக் குழந்தை மற்றவர்களோடு விளையாட மறுத்து ஐபேடைக் கேட்டுப் பிடிவாதம் செய்துகொண்டிருப்பதாக அந்தத் தாய் கூறினார்.
எளிதாக உணவு ஊட்டுவதற்காக, அந்தக் குழந்தைக்குச் சிறு வயது முதல் ஐபாடில், யூடியூபில் வீடியோக்களைக் காட்டியதாகவும், நாளடைவில் குழந்தை தானாகவே நாள் முழுவதும் யூடியூப் வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டதாம். இதனால் உண்டான மன அழுத்தம் காரணமாகவும், அந்தக் குழந்தையோடு பெற்றோர் அதிகமாகப் பேசி விளையாடாமல் போனதாலும், அந்தக் குழந்தை பேசும் திறனை இழந்துவிட்டதாக மருத்துவர் சொன்னதாக அந்தத் தாய் கூறினார்.
**திரைபோடும் திரை பிம்பங்கள்**
குழந்தைகள் சிறு வயது முதலே சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால், உடல் ரீதியான, மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய வாழ்க்கைத் திறன்களும் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. சமூக வலைதளங்கள் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என அறிந்திருந்தும், பெற்றோரே தனது குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கின்றனர். இரண்டு வயது குழந்தைகூடக் கடவுச் சொல்லைப் பயன்படுத்திக் கைபேசியைத் திறந்து, தனக்கு விருப்பமான யூடியூப் சேனல்களையும் விளையாட்டுகளையும் தானே பார்க்கக் கற்றுக்கொண்டுவிடுகிறது. குழந்தையின் இந்தச் செய்கையைப் பெற்றோர் மற்றவர்களிடம் சொல்லிப் பூரித்துப்போகிறார்கள்.
ஆனால், திரைகளுக்கு முன் செலவிடப்படும் குழந்தைப் பருவம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறது. வாழ்க்கைத் திறனை வளர்க்கக்கூடிய கதைகள் கேட்பது, சொல்வது, படங்கள் வரைதல், வண்ணங்கள் தீட்டுதல், நீச்சல் அடித்தல், ஆற்றில் மீன் பிடித்தல், மரத்தில் ஏறிப் பழம் பறித்தல் முதலான செயல்பாடுகள் இன்றைய குழந்தைகளுக்குப் பெரும்பாலும் அறிமுகம் இல்லாதவையாக இருக்கின்றன. அவர்களுடைய பிற்கால வாழ்க்கை ஏட்டுக் கல்வியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக அமையும்பட்சத்தில், பல தொழில்கள் சார்ந்த அறிவு இவர்களுக்கும், இனிவரும் அடுத்த தலைமுறையினருக்கும் கிடைக்காமல் போகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தவிர, அவர்கள் வாழ்க்கை ஓரிரு பரிமாணங்களோடு சுருங்கிப்போகவும் வாய்ப்பிருக்கிறது.
**உறவில் ஏற்படும் விரிசல்**
பெற்றோர் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதாலும் குழந்தைகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பெற்றோர் குழந்தைகளுடன் செலவிட வேண்டிய நேரத்தைச் சமூக வலைதளங்களில் செலவிடுவதால் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்தத் தனிமை அவர்களின் மன வளர்ச்சி முதல் கல்வித் திறன்வரை அனைத்து நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் மூழ்கிப்போயிருக்கும் பெற்றோர் குழந்தைகளின் முக்கியத் தருணங்களைத் தவறவிடுகின்றனர். அவர்களின் செயல்களைப் பாராட்டுவது, தவறுகளைக் கண்டிப்பது, அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி எச்சரிப்பது போன்ற கடமைகளைப் பெற்றோர் மறந்துவிடுவதால், குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்கான அடிப்படை சரிவர அமையப்பெறாமல் போய்விடுகிறது. குழந்தைக்கும் பெற்றோருக்குமான அன்பில் விரிசல் ஏற்படுகிறது. குழந்தைகள் பெற்றோர் மீதான நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றனர். பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ள யாருமற்ற நிலைக்குக் குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் போவதால் அவர்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர்.
இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, குழந்தை வளர்ப்பில் பெற்றோர் தமது அதிகப்படியான பங்கை உறுதிசெய்ய வேண்டும். தான் சமூக வலைதளங்களில் இடையூறின்றி நேரம் செலவிடுவதற்காக, குழந்தைகளையும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாக மாற்றிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இன்று அதிகமாகிவருகின்றனர். இதனால் பின்னாளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைப் பெற்றோரும் குழந்தைகளும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், குழந்தை நலனில் பெற்றோர் கூடுதல் அக்கறை காட்டுவது குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கிறது.
[பெண்களுக்காக விரிக்கப்படும் வலை!](https://minnambalam.com/k/2019/06/06/17)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**
**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**
**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**
�,”