டெல்லியில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தினால் ரூபாய் 5000 அபராதம் வசூலிக்கப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி பாலிதீன் பை உட்பட, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கு தடை விதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. உணவகங்களிலும் அரசு, தனியார் விழாக்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைப்பவர்கள், விற்பவர்கள், பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனாலும் இத்திட்டம் சரியான முறையில் அமலுக்கு வரவில்லை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பல பகுதிகளில் பயன்பாட்டில் இருந்துவருகிறது.
இதுகுறித்து, பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார், நேற்று( ஆகஸ்ட் 10) விசாரணைக்கு வந்த போது, பசுமை தீர்ப்பாய நீதிபதி சுதந்திர குமார், டில்லி முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உரிய முறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மறுசுழற்சி செய்ய முடியாத 50 மைக்ரானுக்கு குறைவான அடர்த்தி உடைய, பாலிதீன் பைகளை பயன்படுத்த, தடை விதிக்கப்படுகிறது என்றும், டெல்லி முழுவதும், தற்போது கையிருப்பில் உள்ள, பாலிதீன் பைகளை, ஒரு வாரத்தில் காலி செய்ய வேண்டும். அதன் பின், தடை செய்யப்பட்ட பாலிதீன் பை வைத்திருக்கும் நபரிடம், அந்த இடத்திலேயே, 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.�,