Iடிடி: இரண்டெழுத்து வசீகரம்!

Published On:

| By Balaji

டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினியின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 17)

தமிழகத்திலேயே இன்றைய நாளில் மிகப் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளர் என்றால், அது திவ்யதர்ஷினியாகத்தான் இருக்க முடியும். தமிழகத்தில் நாம் பார்க்கும் தனித்துவமான பெண்கள் பட்டியலில் நிச்சயமாக நம் டிடி இருந்தே தீருவார்!

மிக இளைய வயதில் அப்பாவை இழந்து, தன் சொந்த உழைப்பில் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, கல்வியிலும் தலைசிறந்து விளங்கியதோடு, தம்பியை விமான ஓட்டுநர் பயிற்சியும் பெறவைத்தார்.

திவ்யதர்ஷினி தன்னுடைய 14ஆம் வயதில், குழந்தைத் தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியின், உங்கள் தீர்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். 1990ஆம் ஆண்டில் வெளியான சுபயாத்ரா என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றினார்.

ராஜ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான, இயக்குநர் கே. பாலசந்தரின் றெக்கை கட்டிய மனசு தொடரில், கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து செல்வி, அரசி உட்பட சில தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். இது தவிர, சரோஜா, நாடோடிகள், கோவா, பலே பாண்டியா, துரோகி ஆகிய படங்களில் டப்பிங் செய்துள்ளார்.

குரலால் இன்று தமிழகத்தையே மயக்கும் டிடிக்கு மூன்று வயது வரை பேச்சு வரவில்லையாம்! ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று, Travel and Tourism Managementஇல் M.Phil பட்டத்தையும் பெற்றவர் டிடி.

2007ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து தொகுப்பாளராகச் செயல்பட்டுவருகிறார். 2014ஆம் ஆண்டுக்கான விகடன் விருதுகளை, காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தட்டிச்சென்றார். 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் தொகுப்பாளருக்கான விகடன் விருதையும் இவரே பெற்றார். இவை தவிர, நடன மாஸ்டர் சதீஷுடன் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் 2012ஆம் ஆண்டில் பங்கேற்றார்.

**- ஆஸிஃபா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share