iசிறப்புக் கட்டுரை: கலைஞரா, கருணாநிதியா?

Published On:

| By Balaji

ஆர்.அபிலாஷ்

திருச்சியில் நடைபெற்ற கலைஞருக்கான புகழஞ்சலிக் கூட்டத்தில் ஒரு பத்திரிகையாளராகப் பேசிய சமஸ் கருணாநிதி எனப் பெயர் சொல்லிப் பேச, அது தொண்டர்களைக் கொதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து சமஸ் தன் முகநூல் பக்கத்தில் இதற்கு ஒரு விளக்கத்தை எழுதியிருக்கிறார். முக்கியமான பதிவு அது. இதற்கு ஷோபா சக்தி எதிர்வினை ஆற்றியிருக்கிறார். பட்டப்பெயர் பயன்படுத்துவது குறித்த இந்த விவாதம் ஆரோக்கியமானது.

ஜனநாயக நாட்டில் ஆட்சியாளர்களையும் தலைவர்களையும் பெயர் சொல்லி அழைப்பதே ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதற்கு உதவும் என்கிறார் சமஸ். கேரளாவில் முன்பு ஒரு வயதுக் குழந்தை ஒன்று அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டியைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டு ஒரு கூட்டத்தில் கேள்வி எழுப்பியதைப் பாராட்டும் சமஸ் அத்தகைய நிலை இங்கும் வர வேண்டும் என்கிறார்.

இதற்குப் பதிலளிக்கும் ஷோபா சக்தி, பட்டப்பெயரைப் பயன்படுத்துவது அவரவர் உணர்வு நிலையை, பிரியத்தை, மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு மார்க்கமே, அதைக் கறாராய் நோக்க வேண்டியதில்லை என்கிறார்.

அன்பா, விழுமியமா? இதுவே அடிப்படைக் கேள்வி.

தர்க்கமும் நடைமுறையும்

சமஸின் நிலைப்பாட்டு விளக்கம் தர்க்கரீதியாய் பிழையற்றது. ஆனால் நடைமுறையில் அதற்கு மதிப்புண்டா என யோசிக்க வேண்டும். நாம் ஆரோக்கியமான ஜனநாயகக் கலாச்சாரத்திலா வாழ்கிறோம்? இல்லை. தமிழகம் வேறு, கேரளா வேறு. நான் கருணாநிதி என்று எப்போதுமே எழுதியதில்லை. என் மொழியில் செயல்பட்ட ஒரு தலைவராக எனக்கு அவர் மீது மிகுந்த மதிப்புண்டு. ஒரு பேச்சாளராய், இலக்கிய வாசகராக அவர் நீண்ட காலம் துடிப்புடன் இயங்கினார். கலைஞரின் செவ்வியல் இலக்கிய மதிப்பீடுகளில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் அவரது எழுத்தார்வத்தை, வாசிப்பு ஊக்கத்தை, தொடர்ந்து இலக்கியவாதிகளுக்கு அவர் அளித்த மதிப்பை நான் கொண்டாடுகிறேன். ஆக, என் பிரியத்தின் வெளிப்பாடாக ஒவ்வொரு முறை கலைஞர் என எழுதும்போதும் எனக்குத் தித்திக்கிறது.

நான் ஜெயலலிதாவை “அம்மா” என்று குறிப்பிட்டதில்லை. ஏனெனில் ஓர் அரசியல் தலைவராக, நிர்வாகியாக அவர் மீதும் அவரது கொள்கைகள், நிலைப்பாடுகள் மீதும் எனக்கு மதிப்பில்லை. ஆனால், ஒரு தனிமனிஷியாக அவர் கண்ட எழுச்சியைக் கண்டு வியந்து போற்றியதுண்டு. ஆக அவரை சொந்தப் பெயரால் அழைப்பதே தகும் என நம்பினேன்.

அரசியல் களத்தில் ஒரு தலைவர் நமக்குக் கடன்பட்ட, நமக்குப் பணி செய்யும் பொருட்டு மட்டும் செயல்படும் ஒரு நபர்தான். ஆனால், அவர் அது மட்டுமே அல்ல என்பதே யதார்த்தம்.

சுய முரண்பாடுகளின் இடம்

சுருக்கமாய்ச் சொல்வதானால், ஓர் அரசியல் தலைவரை வெறும் ஜனநாயகப் பிரதிநிதியாய்க் காணக் கூடாது. ஒருவரை ஒரு பிரதிநிதியாகப் பார்த்து விமர்சிக்கும் நான், அவரை இன்னொரு பக்கம் வழிபடவும் செய்யலாம். ஒருவரை நிராகரித்துக்கொண்டே ஏற்று அணைக்கவும் செய்யலாம். ஒருவரை எதிர்த்து வாக்களித்துவிட்டு, அவரது தேர்தல் தோல்விக்காகக் கண்ணீர் விடவும் செய்யலாம். இந்தச் சுய முரண்பாடே மனித மனத்தின் அடிநாதம்.

இந்த உணர்ச்சிப் பெருக்கான நிலையே நமது பின்னடைவு என சமஸ் கருதலாம்; நாம் இன்னும் கறாராய், கருத்தியல் ரீதியாய், நடைமுறை சார்ந்து அரசியல் தலைமை அணுக வேண்டும் என அவர் ஆசைப்படலாம். அதற்கு மொழியை நாம் பயன்படுத்தும் விதத்தை மாற்ற வேண்டும்; நம் எண்ணங்கள் நம் சொற்களின் நீட்சியே; ஆக பட்டப்பெயர்கள் ஓர் அடிமை மனப்பான்மையை வளர்க்கும், நம்மை வெறும் தொண்டராய் மட்டும் மாற்றிவிடும் என அவர் கோரலாம். இத்தகைய பார்வை ஒருபக்கம் லட்சியபூர்வமானது; இன்னொருபக்கம் மக்கள் மனதைச் சரிவரப் புரிந்துகொள்ளாத பிழையான வாதம்.

இந்தச் சர்ச்சையைப் பொறுத்தவரை சமஸ் நம் மனதை ஒற்றைத் தளத்தில் ஆனதாய்ப் பார்க்கிறாரோ எனத் தோன்றுகிறது. ஆகையால்தான் அவர் “அடைமொழிக் கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்பதைக் குறைந்தது நூறு மேடைகளில் பேசியிருப்பேன். நேற்று உண்மையாகவே பெரிய நெருக்கடி ஏற்பட்டது – எனக்கு ஒருவர் மேடையும் வாய்ப்பும் கொடுத்துவிடும்போது நான் என்ன செய்யப்போகிறேன், என்னுடைய வார்த்தைகளுக்கு நேர்மையாக இருக்கப்போகிறேனா அல்லது கூட்டத்தின் போக்கில் செல்லப்போகிறேனா? நான் என் வார்த்தைகளுக்கு நேர்மையாகச் செயல்பட்டேன்” என்கிறார்.

இந்த “நேர்மை”தான் சமஸின் பிரச்சினை.

மனித மனதின் பல்வேறு கூறுகள்

“என் நம்பிக்கைகளுக்கு நான் விசுவாசமாய் இருக்க வேண்டும்; அடிதவறக் கூடாது” எனும் இந்த விருப்பத்தைக் கவனியுங்கள். தான் ஒரே ஓர் ஆள்தான் எனும் கற்பிதம் இந்தக் கூற்றுக்குள் உள்ளது. ஆனால், உண்மையில் மனிதர்கள் பல கூறானவர்கள். சமஸ் சற்றே நெகிழ்ந்து கொடுத்தால் தனக்குள் உள்ள பல சமஸ்களைப் காணலாம். ஒரே சமயம் பகுத்தறிவாளனாகவும், பகுத்தறிவை மீறி அபத்தங்களையும் மிகைகளையும் ஏற்கிறவனாகவும் இன்றைய மனிதன் இருக்கிறான்.

இதையே ராஜன் குறை தொடர்ந்து வலியுறுத்துகிறார். நான் ராஜன் குறையுடன் உடன்படுகிறேன். சமஸ் பட்டப் பெயர் கலாச்சாரத்தை எதிர்க்கலாம்; ஆனால் அதற்காக அவ்வப்போது உணர்ச்சி மிகுதியில் அவர் ஒருவரைப் பட்டப் பெயரிட்டு அழைத்தால் உலகம் ஒன்றும் இடிந்து போய்விடாது. நாம் முரண்பாடுகளால் ஆனவர்கள்; அப்படி முரண்பட்டு இருப்பதே மனித இயல்பு. மனித மனத்தின் ஈரம், உண்மை, அறம் எல்லாமே முரண்பாட்டின் பால் இயங்கக்கூடியவை. தன்னைப் பிறழ்வின்றி ஒரே பாதையில் வைத்திருக்க வேண்டும் என ஒருவர் எண்ணுவது அவரை இறுக்கமாக்கிவிடும்.

உணர்வுகளும் கருத்துகளும்

உலகம் எந்த அளவு கருத்துகளால் ஆனதோ அதைவிட அதிகமாய் அது உணர்வுகளால் கட்டுண்டது; உணர்வுகளே நமது ஜீவநாடி; உணர்வுகளே நம்மைச் சிறந்த முடிவுகளை எடுக்கத் தூண்டுகின்றன. நம் வரலாற்றின் மிகக் கொடூரமான பல பக்கங்கள் பகுத்தறிவினால் எழுதப்பட்டவையே. ஹிட்லர் பகுத்தறிவுடன் சிந்தித்ததாலேயே யூத அழித்தொழிப்பு நிகழ்ந்தது; மோடி தன் அரசியல் ஆதாயத்துக்காய் பகுத்தறிவுடன் அனுமதித்ததாலேயே குஜராத் வன்முறை பல உயிர்களைப் பலிகொண்டது; மோடிக்கு முன்பு வாஜ்பாயும் நரசிம்ம ராவும் அத்தகைய தவறுகளைச் செய்தார்கள். தூத்துக்குடி படுகொலைகளில் சம்மந்தப்பட்டவர்கள் சற்றே உணர்ச்சிவசப்பட்டிருந்தால், தம் நெஞ்சின் குரலுக்குச் செவி சாய்த்திருந்தால் படுகொலைகள் நிகழ்ந்திருக்காது.

இனி மக்களுக்கு வருவோம். கலைஞருக்காய் மொத்தத் தமிழ்ச் சமூகமும் கண்ணீர் சிந்தி அரற்றியதை, அவரது இறுதி ஊர்வலத்துக்காக மக்கள் பெரும் திரளாய் வந்ததை நாம் கண்டோம். ஆனால், இதே மக்கள்தாம் அவரைப் பல தேர்தல்களில் முறியடித்திருக்கிறார்கள். நம் மக்கள் ஒருவரை நேசிப்பார்கள்; ஆனால், அப்படி நேசிக்கும்போதே அவருக்கு எதிராய் முடிவெடுப்பார்கள். தமிழகத்தில் இந்து மதம் பிரசித்தம்; ஆனால் இந்துத்துவாவுக்கு இங்கே இடமில்லை என்பதையும் நாம் இவ்வாறே புரிந்துகொள்ள முடியும். மக்கள் எங்கெங்கும் முரண்பாட்டு முடிச்சுகளாகவே இருக்கிறார்கள்.

பட்டப் பெயர்களும் ஜனநாயகமும்

பட்டப் பெயர் கலாச்சாரத்தினால் நம் ஜனநாயகம் சீரழிவதில்லை; பட்டப்பெயரால் தலைவர்களை விளித்துக் கைகூப்பிய பின்னரும் நம்மால் ஜனநாயகரீதியாய் செயல்பட முடியும். ஸ்டாலின் ஒரு நல்ல உதாரணம். நான் பல வருடங்களுக்கு முன் கலைஞர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது அங்குள்ள வளாகத்தில் ஸ்டாலினை யதேச்சையாய்க் கண்டேன். விக்கித்து நின்றுவிட்டேன். அவர் உடனே வணக்கம் தெரிவித்தார். நானும் வணங்கினேன். பொதுமக்களைக் கண்டால் அவர்களுக்கான மரியாதையை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியானவர் அவர். எந்த நிலையிலும் அவர் அப்படியே இருப்பார். அவரை நாளை நான் “தளபதியே” என அழைத்தாலும் அவரது அணுகுமுறை மாறாது. மாறாக ஜெயலலிதாவை ஒரு பத்திரிகையாளர் பெயர் சொல்லி அழைத்தே உரையாடினாலும் (ஆங்கில ஊடகவியலாளர்கள் பாணியில்) அதனால் ஜெயலலிதா அவரை ஜனநாயகபூர்வமாய் நடத்தப் போவதில்லை.

மனுஷ்யபுத்திரன் “தளபதி” என ஸ்டாலினை அழைத்ததைக் குறிப்பிட்டு விமர்சித்தவர்களுக்கான என் பதிலும் இதுவே.

பெயரும் நடத்தையும் ஒன்றல்ல; ஜனநாயகத்தை நாம் இப்படிப் பெயரளவில் பார்க்கக் கூடாது.

காந்தியைப் பொறுத்தமட்டிலும் நான் (ஷோபா சக்தியைப் போன்றே) மகாத்மா எனும் பட்டப் பெயரைப் பயன்படுத்தியதில்லை; எனக்கு ஆன்மாவில் நம்பிக்கை இல்லை. மரியாதை தரத் தோன்றினால் “அடிகள்” சேர்த்துக்கொள்வேன். ஒருவேளை எனக்கு அவர் மீது மிகுந்த அன்பு தோன்றியிருந்தால் நெகிழ்ச்சியைக் காட்ட மகாத்மா என விளித்திருப்பேன். ஆனால், காந்தி விஷயத்தில் இதுவரை நான் அந்தளவு நெகிழ்ந்ததில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் நெகிழலாம். அப்போது நான் அவரை “மகாத்மாவே” என விளிப்பேன். அப்படி விளிப்பதற்காகக் குற்றவுணர்வு கொள்ள மாட்டேன். சுயமுரண்பாடு குறித்து எந்தத் தயக்கமும் எனக்கில்லை. நான் பல முகங்கள் கொண்ட, பல பேச்சுகளைக் கொண்ட பிளவுண்ட மனிதன்.

சமஸ் உங்கள் தர்க்க உணர்வு, திறமை, சமூக உணர்வு ஆகியவை மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், நீங்கள் இன்னும் சற்று நெகிழ வேண்டும்; தர்க்கத்தில் இருந்து மீ-தர்க்கத்தின் தளத்துக்கு நகர வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். சில சந்தர்ப்பங்களில் உங்களுடன் நீங்களே முரண்படுங்கள். தவறில்லை.

(**கட்டுரையாளர்:** அபிலாஷ் சந்திரன் எழுத்தாளர். யுவ புரஸ்கார் விருதைப் பெற்றவர். இலக்கியம், உளவியல், கிரிக்கெட் முதலான பல விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: abilashchandran70@gmail.com)

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐ.போன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டண சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share