iசிறப்புக் கட்டுரை: ஏன் இந்தத் தள்ளுபடி?

public

இளங்கோவன் முத்தையா

பெருநிறுவனங்களின் கடன் தள்ளுபடியின் காரணங்களும் தாக்கமும்

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அதானி, எஸ்ஸார் மற்றும் டாட்டா நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 35,000 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்ய பாரத ஸ்டேட் வங்கியை வலியுறுத்தியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

ஏழை நிறுவனமான எஸ்ஸாருக்கு 4000 கோடி, அவர்களை விட ஏழைகளான டாடா நிறுவனத்துக்கு 10,000 கோடி, நாட்டிலேயே பரம ஏழைகளான அதானி நிறுவனத்திற்கு 19,000 கோடி ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே வாராக்கடன்கள் அதலபாதாளத்திற்குப் போய் தத்தளித்துக்கொண்டிருக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் பிரதிநிதிகள் நிதியமைச்சரிடமிருந்து எந்தவித அழுத்தங்களும் இல்லாமல் தாமாகவே முன்வந்து மேற்சொன்ன நிறுவனங்களின் வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்திருப்பார்கள் எனக் குறைந்தபட்ச அறிவுடையவர்கள் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இத்தனைக்கும் மின் உற்பத்தி செய்வதற்கான சாதனங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய்களை மேற்கண்ட நிறுவனங்கள் ஏற்கெனவே வரி ஏய்ப்பு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்தியே இன்னமும் வெளிச்சத்திற்கு வரவில்லை. வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு கடன் ரத்து என்பது அரசின் கொள்கை முடிவாக இருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

இன்னொரு புறம், இதே பாரத ஸ்டேட் வங்கி கல்விக் கடன்களை வசூலிப்பதில் காட்டும் கடுமையான போக்கையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். வசூல் செய்யும் பொறுப்பை ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அளவுக்கு இறங்கியிருக்கிறது அந்த வங்கி.

கடந்த மாதம் மட்டும் எனக்குத் தெரிந்த இளைஞர்கள் இருவரது வீட்டுக் கடன் விண்ணப்பங்கள், அவர்களது மனைவிகள் திருமணத்திற்கு முன்பு வாங்கிய கல்விக் கடன் முறையாகச் செலுத்தப்படாததால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தாமதமாக அல்லது முடிந்த அளவு மட்டும் கல்விக் கடனைச் செலுத்திய, செலுத்திக் கொண்டிருப்பவர்களின் பெயரை உடனடியாகச் சிபிலில் (CIBIL) ஏற்றிவிடும் பொதுத் துறை வங்கிகள், இது போன்ற பெரிய நிறுவனங்களுக்கு எதனடிப்படையில் கோடிக்கணக்கான கடன்களைத் தள்ளுபடி செய்கிறார்கள் என்பதும் கேள்விக்குரியது.

ஒரு சாதாரண மனிதனுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் கடன் தள்ளுபடி அதாவது write off செய்யப்பட்டாலே அது சிபிலில் ஏறிவிடும். பிறகு அவன் வாழ்நாள் முழுவதும் கடன் வாங்குவதற்குச் சிரமப்பட வேண்டும். அப்படியிருக்க கோடிகளில் கடன் தள்ளுபடி செய்யும் நிறுவனங்களுக்கு எப்படி மேலும் கடன் வழங்கப்படுகிறது என்பதுதான் புரியாத புதிர்.

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகையைக்கூட வைத்துக்கொள்ள இயலாதவர்களிடம் கடந்த ஆண்டு இதே பாரத ஸ்டேட் வங்கி எத்தனை ஆயிரம் கோடிகளை அபராதமாக வசூலித்திருக்கிறது என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

அரசியல் அழுத்தங்கள் இல்லாமல் எந்த ஒரு வங்கியும் இப்படித் தெரிந்தே, தானே நஷ்டத்திற்குள் சிக்கிக்கொள்வதற்கு அதன் விதிமுறைகள் இடம் தராது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படியானால் விதிமுறைகள் யாரால், யாருக்கு, எந்தக் காரணத்திற்காக வளைக்கப்படுகின்றன என்ற கேள்வியை யார் எழுப்புவது. அல்லது விதிமுறைகள் என்பவை சாமானியனுக்கு மட்டும்தானா?

வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு அளிக்கப்படும் இலவசங்களையும், மானியங்களையும் படிப்படியாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு ஏற்படும் செலவு அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இது போன்ற நிறுவனங்களுக்குக் கோடிகளில் தள்ளுபடி செய்யப்படும் கடனுக்கான நட்டத்தை சாமானியனின் தலையில்தான் இந்த அரசுகள் இறக்கி வைக்கப்போகின்றன. அவற்றை ஈடுகட்ட, பல்வேறு வகையான வரி விதிப்புகளால் நடுத்தர மக்களின் கழுத்தை ஏற்கனவே அரசு நெரித்துக் கொண்டுதானிருக்கிறது.

சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை வரியாக, அரசுக்கு வருவாயாக அளிக்கும் குடிமகனின் பணம் இப்படியான வரி ஏய்ப்பு செய்யும் கார்ப்பரேட்டுகளின் கோடிக்கணக்கான கடனை ரத்து செய்யப் பயன்படுத்தப்படுவது என்பது அரசு, தனக்கு வரி செலுத்தும் மக்களை அப்பட்டமாக ஏமாற்றுவதேயாகும்.

சாமானியன் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்பவன் என்பது நமக்குத் தெரிவதைவிட, இந்த அரசுகளுக்கு நன்றாகத் தெரிந்திருப்பதுதான் நம் சாபக்கேடு.

சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பண மதிப்பிழப்பு என்ற பெயரால் நாட்டின் அத்தனை குடிமகன்களின் வயிற்றிலும் நேரடியாக அடித்தது இந்த அரசு. இப்போது கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளின் சுமையும் அவன் மீதுதான் மறைமுகமாகச் சுமத்தப்படும்.

இது மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் அரசு கிடையாது. வெளிப்படையாகவே, கார்ப்பரேட்டுகளால், கார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படும் அரசு என்பதே உண்மை.

ஊருக்கு இளைத்தவன், பிள்ளையார் கோயில் ஆண்டி என்று ஒரு சொலவடை உண்டு. வருகிறவன், போகிறவன் எல்லாம் அடிப்பான் என்கிற அர்த்தத்தில் சொல்லப்படுவது. அந்த ஆண்டி வேறு யாருமல்ல. நீங்களும் நானும்தான்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0