அக்டோபர் 2 அன்று சைரா நரசிம்மா ரெட்டி உலகம் முழுவதும் வெளியிடப்பட இருக்கிறது. இதனால் படத்தில் விநியோக உரிமை வாங்குவதில் கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி சௌத்ரி வெளியிடுகிறார். தமிழகம் முழுவதும் படத்திற்கு விநியோகஸ்தர்களை நியமிக்கும் பொறுப்பை தன்னுடன் நீண்ட வருடங்களாக வியாபாரத் தொடர்பு வைத்திருக்கும் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களிடம் சௌத்ரி வழங்கியிருந்தார்.
தன்னுடன் வியாபார ரீதியாக தொடர்பு வைத்திருந்த முதல் தரமான வினியோகஸ்தர்கள் மூலம் இப்படத்தை வெளியிடுவதற்கு திருப்பூர் சுப்பிரமணியம் ஏற்பாடு செய்த சூழலில் மதுரை, சேலம் ஏரியாக்களில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் சைரா நரசிம்மா ரெட்டி படத்தை வெளியிடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் பைனான்சியர், முன்னணி வினியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்ட சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சைரா நரசிம்மா ரெட்டி படத்தை 5% கமிஷனை, விநியோகஸ்தர் கமிஷன் என்கிற அடிப்படையில் வெளியிட சம்மதம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தெலுங்கு மொழியில் பிரம்மாண்ட படைப்பாக அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் சேலம், மதுரை ஏரியா விநியோக உரிமையை கைப்பற்றுவதற்கு மிகக்குறைவான ‘2.5 % கமிஷன் கொடுத்தால் போதும் படத்தை நாங்கள் ரிலீஸ் செய்து தருகிறோம்’ என்று ரெட் ஜெயண்ட் சொல்ல, அந்தப்படத்தின் விநியோக உரிமை ரெட் ஜெயண்ட் வசம் கைமாறியிருக்கிறது.
சினிமா தொடங்கிய காலத்தில் விநியோகஸ்தர்களுக்கு 20% கமிஷன் வழங்கப்பட்டு வந்தது. அது படிப்படியாக 15%, 10%, 7% என்று தொழில் நெருக்கடி காரணமாக குறைந்து வந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2.5% கமிஷனுக்கு விநியோக முறையில் படத்தை வெளியிடுவதற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனம் ஒப்புக் கொண்டிருப்பது தமிழ் சினிமா விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி. சிரஞ்சீவி கதாநாயனாக நடிக்கும் இப்படத்தை அவரது மகன் ராம் சரண் தயாரித்துள்ளார். தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் ஹிந்தி ரசிகர்களை குறிவைத்து அந்தந்த மொழி முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.�,