iசமந்தா வெற்றிக்கு மெனக்கெடும் அனிருத்

Published On:

| By Balaji

சமந்தா நடிக்கும் யூ டர்ன் படத்தின் புரொமோஷனில் பணியாற்றியுள்ளார் அனிருத்.

டீசர், ட்ரெய்லர், வெளியிட்டு படம் பற்றியும் அதன் கதாபாத்திரங்கள் பற்றியும் சிலவற்றை சொல்லியும் சொல்லாமலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர் படக்குழுவினர். படத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது வெற்றிகரமான பணியாக மட்டுமல்லாமல் அவசியமான பணியாகவும் மாறியுள்ளது. ஆனால் இப்போதுள்ள ட்ரெண்டிற்கு இது மட்டும் போதாது என்ற நிலைமையும் உருவாகியுள்ளது. பிரதான கதாபாத்திரம் எதை நோக்கிப் பயணப்படவுள்ளது; அதன் மனநிலையைப் பிரதிபலிக்குமாறும், கதையின் மையத்தை விளக்குமாறும் ஒரு பாடல் வெளியிடுவது வழக்கமாகியுள்ளது.

சமூகவலைதளங்களின் மூலம் வரவேற்பு பெறும் இந்த முறையின் அவசியத்தை உணர்ந்த தயாரிப்பு தரப்பு, படக்குழுவைச் சாராதவர்களையும் அழைத்துவந்து பாடல் தயாரிப்பில் ஈடுபடுத்துகின்றன. நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கினாலும் புரொமோஷன் பாடலை விக்னேஷ் சிவன் இயக்கினார். அனிருத் இசையமைத்து, பாடி, நடித்த அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

சமந்தா நடிப்பில் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாக உள்ள யூ டர்ன் படத்தை பவன் குமார் இயக்கியுள்ளார். இந்நிலையில் அதன் புரொமோஷன் பாடலை கிருஷ்ண மாரிமுத்து இயக்கியுள்ளார். படத்திற்கு பூமா சந்திரா தேஜஸ்வி இசையமைத்துள்ளார். ஆனால் புரோமோ பாடலுக்காகப் படக்குழு அனிருத்தை ஒப்பந்தம் செய்தது. அவரே பாடி நடித்துள்ள இந்தப் பாடலும் கவனம் பெற்றுவருகிறது.

*“திசை திரும்பினாலும்*

*கடல் மலை கடந்து போனாலும்*

*மனம் திருந்தினாலும்*

*வலி ரணம் மறந்து போனாலும்*

*சகா…*

*வானம் தூரம் எங்கே சென்றாலும்*

*சகா..*

*வினை உனை தொடும்*

*உன் சிரிப்புக்கு வினை நீ தான்*

*உன் கண்ணீருக்கு ஒரே விடை நீ தான்”*

என தோல்வியிலிருந்து துடித்தெழுந்து போராட அழைப்பதாக, ரணங்களுக்கு மருந்திட்டு ஆற்றுப்படுத்துவதாக இதன் வரிகளைச் சுப்பு எழுதியுள்ளார். படத்தின் புரொமோஷனுக்கான பாடலாக மட்டுமல்லாமல் எப்போதும் கேட்கக்கூடிய வகையில் வரிகளும் இசையும் அமைந்துள்ளது.

[யூ டர்ன் புரோமோ பாடல்](https://www.youtube.com/watch?v=twl56JMNNjA)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share