மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜையையொட்டி, இன்று மாலை 5 மணியளவில் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. நாளை (நவம்பர் 17) முதல் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படவுள்ளனர்.
கார்த்திகை மாதம் முதல் தேதிக்குப் பிறகு, தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக இன்று (நவம்பர் 16) சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.
மாலை 5 மணியளவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கோயில் நடையைத் திறந்துவைத்தார். இன்று இரவு 10 மணிக்கு கோயில் மூடப்பட்டு, மீண்டும் நாளை காலை 4 மணி முதல் பூஜைகள் மேற்கொள்ளப்படும். வரும் டிசம்பர் 27ஆம் தேதியன்று மண்டல பூஜை நடைபெறவுள்ளது. அதன்பிறகு கோயில் நடை சாத்தப்பட்டு, டிசம்பர் 30ஆம் தேதி முதல் மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்படும். இது ஜனவரி 14ஆம் தேதி வரை தொடரும்.
**144 தடை**
62 நாட்கள் பக்தர்களின் வருகை சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருக்குமென்பதால், அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு விதித்த பின்பு, இதுவரை குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் எவரும் கோயிலுக்குள் நுழையவில்லை. வரும் 22ஆம் தேதி வரை சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உட்படச் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை பயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் ஐயப்ப சேவா சங்கம் போன்ற இந்துத்துவ அமைப்புகள், பெண்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததே இதற்குக் காரணம். இம்முறை அவ்வாறு நடக்காமல் இருக்க, கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
**கட்டுப்பாடுகள்**
கடந்த முறை போல இல்லாமல், இம்முறை ஊடகத்தினருக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாரும் கோயில் சன்னிதானத்துக்குள் நுழைய அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, பிரசாதம் விற்பனை செய்யும் கவுண்டர்களை இரவு 10 மணிக்குள் மூடிவிட வேண்டுமென்றும், அன்னதானக் கூடங்களை 11 மணிக்குள் மூடிவிடவேண்டுமென்றும், கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் தங்கக்கூடாது என்றும் கேரள காவல் துறை கட்டுப்பாடு விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் சபரிமலை கோயில் தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி சுதீஷ் குமார். இதுபற்றி தேவசம் போர்டு கூடி முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.
**திருப்தியைத் தொடரும் எதிர்ப்பு**
முன்னதாக, நாளை சபரிமலை செல்வதற்காக 6 பெண்கள் கொண்ட குழுவினருடன் வந்த சமூகச் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய்க்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. கொச்சி விமான நிலையத்தை விட்டு அவர் வெளியேற முடியாத வகையில் ஐயப்ப சேவா சங்கம், கர்ணா சமிதி மற்றும் பாஜக உட்படச் சில கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொச்சி விமானநிலைய வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ராகுல் ஈஸ்வர் போன்றவர்களும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளனர். இதனால், இன்று காலை 4.30 மணியளவில் கொச்சி வந்த திருப்தி, இப்போதுவரை விமான நிலையத்திலேயே இருந்து வருகிறார்.
நிலைமையைக் கருத்தில்கொண்டு, மீண்டும் புனே திரும்புமாறு திருப்தி தேசாயிடம் வலியுறுத்தியுள்ளனர் கேரள போலீசார். இன்று இரவு, திருப்தி தனது குழுவினருடன் புனே திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
�,”