1987ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ரிலையன்ஸ் உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டபோது, அந்த நாட்டு மக்களைவிட அதிகம் வருத்தப்பட்டவர் எங்கள் ஏரியா கிரிக்கெட் டீம் கேப்டன் குமார் அண்ணன்தான். ஏனென்றால் அவர், இயன் போத்தமின் தீவிர ரசிகர். அந்நாள்வரை அவர் போத்தம் ஆடிய எந்த மேட்ச்சையும் நேரடியாகவோ, தொலைக்காட்சியிலோ பார்த்ததில்லை. ஆனாலும் அவர் இங்கிலாந்து அணி ஆடிய ஆட்டங்களின் வர்ணனையை பிபிசி ரேடியோவில் கேட்டும், அதுதொடர்பான செய்திகளையும் படித்தே போத்தத்தின் பெரிய ரசிகராய் மாறி இருந்தார்.
அப்போது லைப்ரரிக்கு வரும் காப்பி தவிர, எங்கள் ஊருக்கு மூன்றே மூன்று ஸ்போர்ட் ஸ்டார் புத்தகங்கள்தான் வரும். அதில் ஒன்றை, குமார் அண்ணனும் இன்னொன்றை, ஸ்டேட் பாங்க் மேனேஜர் ஒருவரும் வாங்குவார்கள். மூன்றாவது காப்பி பஸ் ஸ்டாண்ட் கடையில் தொங்கிக்கொண்டேயிருக்கும். வெளியூர் பிரயாணிகள் யாராவது அதை வாங்குவார்கள். இல்லையெனில் ரிட்டர்ன்தான். அந்த வாரம், குமார் அண்ணன் வெளியூர் சென்றுவிட்டார். பஸ் ஸ்டாண்டில் இருந்த 2 காப்பிகளை எப்போதாவது, பாலோஆன் வாங்கியும் ஜெயிக்கும் அணியைப்போல இரண்டு பேர் வாங்கிச் சென்றுவிட்டார்கள். குமார் அண்ணன் ஊரிலிருந்து வந்ததும் புத்தகம் இல்லையென தெரிந்து டென்சன் ஆகிவிட்டார், ஏனென்றால், அந்த வாரம் நடுப்பக்க நாயகன் போத்தம். அடுத்த பஸ்ஸிலேயே மதுரைக்குச் சென்று காலேஜ் ஹவுஸ் புத்தகக் கடையில் ஒன்றுக்கு இரண்டு காப்பியாக வாங்கி வந்தார்.
போத்தம் ஆறடிக்கும் சற்றுக் கூடுதலான உயரம், ஆனால், அந்த உயரம் சட்டென தெரியாதபடி சற்றுப் பருமனான உடல்வாகு. ஹாலிவுட் ஹீரோ போன்ற முகவெட்டு. அந்த நடுப்பக்கப் படத்தில் நீலநிற ஜீன்ஸும், சிவப்பு சட்டையும் அணிந்து அதற்குமேல் ஜீன்ஸால் ஆன சட்டையை ஜெர்கின்போல பட்டன் போடாமல் அணிந்திருப்பார். சீரான தாடி, கூலிங் கிளாஸ், கழுத்தில் தொங்கும் கேமரா உடன் ஒரு மலைப்பாறையில் ஸ்டைலாக அவர் உட்கார்ந்திருக்கும் அந்த போஸ் யாரையும் வசீகரித்துவிடும்.
அந்தப் போஸ்டரை வீட்டில் ஒட்டி தினமும் சூடம் காண்பிக்காத குறைதான். அந்த அளவுக்கு போத்தம்மீது பிரியம் கொண்டிருந்த குமார் அண்ணனுக்கு, உலகக் கோப்பை போட்டிக்கு போத்தம் வராதது பெரிய மனவருத்தம் கொடுத்தது.
இதுவரை,. இங்கிலாந்துக்கு விளையாடிய ஆல் ரவுண்டர்களில் போத்தமின் இடத்தை நிரப்ப இன்றுவரை ஆள் இல்லை. பொதுவாகவே, எந்தத் துறையிலும் எதிர் எதிர் துருவங்களாக இருமுனைப் போட்டிதான் பெரிதும் பேசப்படும். சினிமா மற்றும் கிரிக்கெட்டில் இது அதிகம். கிரிக்கெட்டில் சச்சின் – லாரா, வார்னே – முரளிதரன் எனப் பல உதாரணங்கள் உண்டு. ஆனால், ஒரே நேரத்தில் நான்குபேர் ஒரே துறையில், ஒரே சமயத்தில் போட்டியாளர்களாக இருந்தது எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இருந்த இம்ரான்கான், இயன் போத்தம், ரிச்சர்ட் ஹேட்லி மற்றும் கபில்தேவ்தான். இந்த ஆல்ரவுண்டர்களை ரீ பிளேஸ் செய்ய அந்தந்த நாட்டில் யாரும் உருவாகவில்லை. ஏன், உலக அளவில்கூட யாரும் உருவாகவில்லை.
குமார் அண்ணன் போத்தமை பற்றிச் சொல்லும்போதெல்லாம் அடிக்கடி குறிப்பிடும் விஷயம் 81ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரைப் பற்றித்தான். அந்தத் தொடருக்கு போத்தம்தான் கேப்டன். ஒரு டெஸ்ட்டில் தோல்வியும், ஒன்றில் டிராவையும் செய்து இங்கிலாந்து அணி திணறிக் கொண்டிருந்தது. சில சூழ்நிலைகளால் போத்தம் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார். மைக் பியர்லி கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். மூன்றாம் டெஸ்ட்டில் சோதனையாக பாலோஆன் வாங்கி தத்தளித்துக் கொண்டிருந்தது. பேட்ஸ்மென்கள் அனைவரும் பெவிலியன் திரும்பி விட்டனர். பந்து வீச்சாளர்களுடன் இணைந்து போத்தம் ஒரு 145 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி 120 ரன்கள் முன்னிலைபெற்றது. பின், ஆஸ்திரேலிய அணியை அந்த ரன்களுக்குள் சுருட்டி வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி. அடுத்த 2 டெஸ்ட்டுகளையும் போத்தமின் பந்து வீச்சாலும், பேட்டிங்காலும் வென்று தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. கிட்டத்தட்ட தனி ஒருவனாக நின்று ஆஸ்திரேலியாவை வீழ்த்திக் காட்டினார் போத்தம். இதேபோலத்தான் ட்ராவிட்டும் லக்ஷ்மணனும் இணைந்து கல்கத்தாவில் பாலோஆன் வாங்கிய அணியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜெயிக்கவைத்தார்கள்.
போத்தமின் பேட்டிங் ஸ்டைலானது மிகவும் சிம்பிளானது. ஸ்டைலான பேட்ஸ்மென் என்றெல்லாம் சொல்லமுடியாது, அவரது அணி சகவீரர் டேவிட் கோவரின் பேட்டிங் ஸ்டைலுக்குப் பக்கத்தில்கூட அவரால் வரமுடியாது. ஆனால், எஃபெக்டிவான பேட்ஸ்மென். பந்தை சரியாகக் கணித்து ஃபோர்ஸாக அடிக்கக்கூடியவர், பெரும்பாலும், மிட்ஆன் மற்றும் மிட்ஆஃப் திசையில் பவர் ஷாட் ஆடுவார். நல்ல லெங்த்தில் வீசப்படும் பந்தைக்கூட அந்த திசையில் பறக்கவிடுவார். ஹூக் அண்ட் புல் ஷாட் அடிப்பதில் கில்லாடி. கவர் டிரைவ் மற்றும் ஸ்கொயர் ட்ரைவ் ஸ்டைலிஷாக இருக்காது. ஆனால், ஸ்கொயர் கட் பொறி பறக்கும். இப்போது பிரபலமாக இருக்கும் ரிவர்ஸ் சுவீப்பை அப்போதே ஆடியவர். அதை வேகப்பந்து வீச்சாளரிடமே ஆடுவார் என்பது இன்னும் விசேஷம்.
மார்ஷல், தாம்சன்போல போத்தம் அதிவேகப் பந்துவீச்சாளர் கிடையாது. ஆனால், பந்தை அருமையாக சுவிங் செய்யக்கூடியவர். செட்டிலான பேட்ஸ்மென்களையே எளிதில் திணறடித்துவிடுவார். 70களில் நல்ல வேகத்தில் வீசிக்கொண்டிருந்தபோது, பந்தையும் சுவிங் செய்வதால் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். 80களின் மத்திக்குப் பிறகு அவரது விக்கெட் எடுக்கும் திறமை சற்று குறையத் தொடங்கியிருந்தது.
போத்தமின் பீல்டிங்கும் சிறப்பான ஒன்று. ஒருமுறை அவர் ஆப் அண்ட் மிடிலில் வீசிய பந்தை பேட்ஸ்மென் ரன்னரின் தலைக்குமேலே அதி வேகத்தில் அடித்தார். பந்துவீசி லேண்ட் ஆகி கண் இமைப்பதற்குள் தன் வலது கைப்பக்கம் பாய்ந்து அந்த கேட்சைப் பிடிப்பார். போத்தமைத் தவிர அதை யாருமே நம்பவில்லை. ஒரு அதிசயம்போலவே அதை அனைவரும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
ஒருவழியாக, குமார் அண்ணன் 91ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலகக் கோப்பை நேரடி ஒளிபரப்பில்தான் போத்தமைக் கண்டார். அந்தத் தொடரில் கேப்டன் கூச்சுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக இறங்கினார் போத்தம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளையும் எடுத்து 53 ரன்களையும் அடித்தார். இத்தனைக்கும் அது, அவரின் அந்திமக் காலம். இந்தியாவுடன் ஆடிய மேட்ச்சிலும் நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருந்த தெண்டுல்கரை திணறடித்து அவுட் ஆக்கி வெற்றிக்கு வழிவகுத்தார். தெண்டுல்கர் அவுட் ஆனவுடன் அவர் ஆடிய ஸ்டைலான ஆட்டம் அந்த கோப்பையின் சிறந்த வெற்றி ஆட்டங்களில் தலையாயது. இங்கிலாந்து ஃபைனல் வரை போக முக்கியக் காரணமாக இருந்ததே போத்தமின் ஆல் ரவுண்டர் திறமைதான். ஆனால், ஃபைனலில் இறுதிச் சிரிப்பு அவரது சக ஆல்ரவுண்டர் போட்டியாளரான இம்ரான்கானுக்கே வாய்த்தது.
அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து போத்தம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அதற்கடுத்து, யாராவது நன்கு பந்துவீசி, நாலு மேட்ச் ஒழுங்காக பேட்டிங் ஆடிவிட்டாலே வந்துவிட்டார் புதிய போத்தம் என்று இங்கிலாந்து பத்திரிகைகள் கூக்குரலிடும். அப்படித்தான் டொமினிக் கார்க் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒரு ஹேட் டிரிக் எடுத்து 50 ரன்கள் எடுத்தவுடன் அடுத்த போத்தம் என்றார்கள். பிளிண்ட் ஆப் 2005ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் கிட்டத்தட்ட போத்தம்போலவே பெர்ஃபார்ம் செய்து பெரிய பெயர்பெற்றார். வந்து விட்டார் புது போத்தம் என்றார்கள், அவர்களாலும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய முடியவில்லை.
போத்தம் ஒரு சண்டைக்கோழி டைப் கேரக்டரும்கூட. ஒருமுறை ஆசியர்களை வம்பிழுத்தபோது, இம்ரான்கான் அதற்குப் பதிலடியாக “நீங்கள் குகைகளில் வாழ்ந்துகொண்டிருந்தபோதே வடிகால் வசதிகளுடன் நாகரிக வசிப்பிடங்கள் கட்டி வாழந்தவர்கள் நாங்கள்’’ என பதிலடி கொடுத்தார். இப்போது, ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராக சிறப்பான பணியை மேற்கொண்டிருக்கிறார் போத்தம்.
ஆளையே பார்க்காமல், செய்திகள் வர்ணனைகள்மூலமே போத்தமின்மீது பெரும் அபிமானம் கொண்டவர்கள் இந்தியாவில் அப்போது அதிகம் இருந்தார்கள். அப்படியென்றால் இங்கிலாந்தில் எப்படிப்பட்ட ஹீரோவாய் அவர் அப்போது இருந்திருப்பார்?�,